முன்னாள் அமைச்சரின் மகன் கைது: அமலாக்கத்துறை அதிரடி!

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகன் அமலாக்கத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் மகன் அன்பழகன் அமலாக்கத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.80 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி மோசடி செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செல்போன், லேப்டாப் வாங்குவதாக கூறி போலி நிறுவனங்களுக்கு அனுப்பியதாக புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அன்பழகன் கைது பின்னணி:-

பல்வேறு தனியார் நிறுவனங்களின் போலியான பெயர்களில், குறிப்பாக கிழக்கு நாடுகளில் போலியான பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி, அந்த நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய அளவிற்கு மொபைல்போன்கள், லேப்டாப்புகள் இறக்குமதி செய்வதாகக் கூறி, கிட்டத்தட்ட ரூ.80 கோடி அளவிற்கு அந்த நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், அது மாதிரியான லேப்டாப்போ அல்லது மொபைல்போனோ இறக்குமதி செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இது சம்பந்தமாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் இதை விசாரித்த பின், மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, போலியான பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு முன் தொகையாக பல கோடி ரூபாய் தமிழகத்திலிருந்து சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான விசாரணை தொடர்ந்து நடந்து வந்துக் கொண்டிருந்தது.

இது சம்பந்தமாக தொழிலதிபர் லியாகத் அலிகான் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இதன் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சரின் மகன் அன்பழகனை, அமலாக்கத்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லியாகத் கானோடு சேர்ந்து அன்பழகன் போலியான நிறுவனம் மூலமாக, அந்நிய செலாவணி மோசடி செய்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனவே, இது சம்பந்தமாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

அன்பழகன் மீது மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணப்பவரித்தனை செய்ததாக கணக்குக் காட்டி, பொருட்களை இறக்குமதி செய்வதாக மோசடி செய்து, இங்கிருந்து செல்லக்கூடிய கருப்புப் பணம், அங்கு வெள்ளையாக மாற்றி, பின் இங்கு வெள்ளைப்பணமாக கொண்டுவருவதற்கான முயற்சியாகவே அதிகாரிகள் இதனைப் பார்க்கிறார்கள்.

மத்திய அரசு கருப்புப் பணம் ஒழிப்பதை மிகத் தீவிரமாக அமல்படுத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close