முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் காரைக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஜிஎஸ்டி கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்தது. இதனை கடந்த 2010ல் நிறைவேற்ற முயற்சி செய்தோம். அப்போது, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்கள் முட்டுக்கட்டை போட்டன. தமிழக அரசும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஜிஎஸ்டிக்கு முன்னோடி காங்கிரஸ்தான். ஆனால், இப்போது ஜி.எஸ்.டி.க்கு முதல் எதிரி போல் காங்கிரஸ் கட்சியை சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.
உண்மையில், ஜி.எஸ்.டி.க்கு முதல் எதிரி பா.ஜ.க தான். அவர்கள் எதிர்கட்சியாக இருந்தபோது ஜி.எஸ்.டி.யை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தங்களது நிலையை மாற்றிக் கொண்டனர். . உண்மையான ஜிஎஸ்டி நாட்டுக்கு நல்லது. அதனைத் தான் காங்கிரஸ் ஆதரித்தது. தற்போது அமலுக்கு வந்தது முழுமையான ஜிஎஸ்டி அல்ல. இந்த ஜிஎஸ்டியில் குறை உள்ளதால், காங்கிரஸ் எதிர்க்கிறது. மற்ற நாடுகளை விட ஜிஎஸ்டி மிக அதிகம்.
வரி விதிப்பு 15 சதவீதம் அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வரி விதிப்பு முறைகளில் நிறைய குறைகள் உள்ளன. வியாபாரிகளை வகைப்படுத்துவதில் குளறுபடி உள்ளது. எந்த அரசு எந்த வியாபாரியை கண்காணிக்கும் என தெரியவில்லை.
பல மாநிலங்களில் தொழில் செய்வோர், எண்ணற்ற வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கடினமாக உள்ளது. மின்சாரம், பெட்ரோல், டீசல், எரிசாராயம் உள்ளிட்ட பல 45 சதவீத வர்த்தக பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் வரவில்லை. இது போல் மோசமான மசோதா எதுவும் இருக்க முடியாது.
போக்குவரத்து, மின்சார கட்டணம், வீடு, லாரி வாடகை அதிகரித்துள்ளது. இந்த சட்டத்தில் பல மோசமான சரத்துகள் உள்ளன. இது உண்மையான, லட்சிய ஜிஎஸ்டி இல்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பின் முதல் விளைவாக பணவீக்கம் நிச்சயம் ஏற்படும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. சிறுகுறு நடுத்தர வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி பெரிய சுமையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.