Advertisment

காங்கிரஸ் கட்சியினர் களத்தில் வேலை செய்ய வேண்டும்... முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் நேர்காணல்

சசிகாந்த் செந்தில்: நாம் நம்முடைய அடிப்படையை மறந்துவிட்டோம் என்றால் நாம் நம்முடைய அடித்தளத்தை இழந்துவிடுகிறோம். நம்முடைய அடிப்படை என்ன என்பது குறித்து மறுபடியும் ஒரு ஞாபகம் வந்தது என்றால் சரியாகிவிடும்.

author-image
Balaji E
New Update
காங்கிரஸ் கட்சியினர் களத்தில் வேலை செய்ய வேண்டும்...  முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் நேர்காணல்

பாஜகவின் வெறுப்பு பிரசாரத்தையும் அதன் போக்கையும் எதிர்த்து தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு ஐஏஎஸ் பணியை உதறிவிட்டு அரசியலில் களம் இறங்கியவர் சசிகாந்த் செந்தில். இவர் கடந்த செப்டம்பர், 2020ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தற்போது அவரை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக அறிவித்துள்ளது. சந்திகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒருன்கிணைப்பாளராக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. சசிகாந்த் செந்தில் உடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் செல்போன் மூலம் ஒரு நேர்காணல் செய்தோம். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் உடனான உரையாடலை இங்கே காணலாம்.

Advertisment

கேள்வி: ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் நீங்கள் எந்த நம்பிக்கையோடு இணைந்தீர்கள்?

சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் நான் கடந்த செப்டம்பர் மாதம் தான் இணைந்தேன். அப்படி பார்த்தால் நான் காங்கிரஸில் சேர்ந்து இன்னும் 5 மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்கு முன்னாடி நான் 2019ல் ராஜினாமா செய்ததற்கு பிறகு, நான் மக்கள் இயக்கங்களோடுதான் இயங்கிக்கொண்டிருந்தேன். என்.ஆர்.சி.சி இயக்கம், அதில் இந்தியா முழுக்க போய் எல்லோருடனும் பேசி இந்த பிரச்னைகளை புரிய வைப்பதுதான் என் வேலையாக இருந்தது. தமிழகத்துக்கு நான் ரொம்ப தாமதமாகத்தான் வந்தேன். ஏனென்றால், தமிழகத்தில் பிஜேபி ஒன்றும் செய்ய முடியாது என்பது எனது எண்ணமாக இருந்தது.

நான் ராஜினாமா கொடுத்தது என்பது ஏதோ ஒரு நிகழ்வையொட்டி அல்ல. அது ஒட்டுமொத்தமாக நாடு எந்த திசையில் போகிறது என்பதை வைத்துதான். இதே திசையில் போனால், அடுத்த சந்ததியினருக்கு ஒன்றுமே இருக்காது. இந்த நாட்டினுடைய முக்கிய பலமே பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் வித்தியாசத்தை கொண்டாடி வாழ்வோம் என்ற சித்தாந்தம்தான் இந்தியா. இப்போது நிறைய பேருக்கு சுதந்திரப் போராட்டம் பற்றி எல்லாம் மறந்துவிட்டதனால், அதைப்பற்றி ஞாபகம் இல்லை. ஆனால், சுதந்திரப் போராட்டத்தின்போது, வெறும் வெள்ளைக்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்று மட்டும் நாம் போராடவில்லை. அதற்கு, இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற சர்ச்சையும் நடந்தது. அப்போது, பெரும்பான்மையாக இருக்கிற மக்கள்தான் ஆள வேண்டும் என்ற ஒரு தத்துவம் இருந்தது. அதாவது மற்றவர்கள் எல்லாம் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையாக இருக்கிறவர்கள்தான் ஆள வேண்டும் என்ற ஒரு தத்துவம் இருந்தது. அது இரண்டு மதங்களிலும் இருந்தது. அப்படி முஸ்லிம்களும் சொன்னார்கள். இந்துக்களும் சொன்னார்கள். அதில் முஸ்லிம்கள் நாங்கள் தனி நாடாக பிரித்துக்கொண்டு போகிறோம் என்று பாகிஸ்தானை பிரித்துக்கொண்டு போய்விட்டார்கள். அங்கே பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய அரசுதான். ஆனால், இந்தியா என்ன சொன்னது என்றால், நாம் இந்து நாடாக எல்லாம் இருக்க முடியாது. நாம் ஒரு மதச்சார்பற்ற அரசு. மதச்சார்பற்ற வித்தியாசங்களைக் கொண்டாடும் நாடாக இருப்போம் என்ற சித்தாந்தத்தில் உருவானதுதான் நமது அரசியலமைப்பு சட்டம்.

ஆனால், அப்பவே சில பேருக்கு இந்த மாதிரி கலவையாக வைத்திருப்பது புடிக்காத ஒரு குழு இருந்தது, அதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதனால்தான், அவர்கள் சுதந்திரப் போராட்டத்திலேயே ஈடுபடவில்லை. அவர்களுக்கும் வெள்ளைக்காரர்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், வெள்ளைக்காரர்கள் வெளியே போன பிறகு, நீங்கள் இப்படிதான் ஒரு இந்தியாவை உருவாக்குவீர்கள் என்றால், நாங்கள் சேரமாட்டோம் என்பதுதான் அவர்களுடை சிந்தனை. அதன் பிறகு, அவர்கள் 100 வருஷம் வேலை செய்து இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

இப்போது அவர்களுடைய ஃபார்முலாவை மாற்றிக்கொண்டுள்ளார்கள். மாற்றிக்கொண்டுள்ளார்கள் என்றால், அடித்தளம் ஒன்றுதான் ஆனால் சொல்கிற விதத்தை இப்போது வேறு மாதிரி சொல்கிறார்கள். இவர்களுடைய எண்ணமே இந்தியாவின் பண்முகத்தன்மையை எடுத்துவிட்டு ஒற்றைத் தன்மைகொண்ட இந்தியாவாக மாற்ற வேண்டும் என்பதுதான். இதைப் பார்த்ததினால்தான், நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இதற்கு எதிராக போராட வேண்டும் என்று வந்தேன். நான் மட்டும் போராடாமல் பல பேரை போராட்டத்துக்கு கொண்டுவர வேண்டும். இந்த புரிதலை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்காக இருந்தது. அதனால், நான் பணியில் இருந்து வெளியே வந்தேன்.

அதற்குப் பிறகு, நான் மக்கள் இயக்கங்களுடன் ஒரு ஒன்றரை ஆண்டுகள் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு விஷயம் புரிந்தது. இதற்கு அரசியலாக முற்றுப்புள்ளை வைக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது காங்கிரஸிடம்தான் இருக்கிறது என்று காங்கிரஸில் சேர்ந்தேன். காங்கிரஸின் சித்தாந்தம் என்பது நமது அரசியலமைப்பு சித்தாந்தம்தான். அமைப்பில் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், சித்தாந்தம் சரியான சித்தாந்தம். அதனால்தான், நான் காங்கிரஸ் சித்தாந்தத்தை எப்படியாவது முன்னே கொண்டுபோகவேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸில் சேர்ந்தேன். இதுதான் என்னுடைய பயணம்.

நான் கட்சியில் சேர்ந்து 5 மாதங்களுக்குள் இந்த பொறுப்பு பதவிகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். எனக்கு காங்கிரஸின் தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதுதான் என்னுடைய முதல்நிலை இலக்கு. அதற்காக எத்தனை பேரிடம் பேசமுடியுமோ அத்தனை பேர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை எந்த வெறுப்பு சித்தாந்தமும் வரும் சந்ததியினருக்கு நல்லது செய்யாது. எந்த சித்தாந்தமாக இருந்தாலும் அது ஒற்றுமையால் ஒருங்கிணைப்பதாக இருந்தால்தான் சரியாக இருக்கும்.

நாம் இந்த கொரோனா என்கிற ஒரு விஷயத்தையே பார்க்கிறோம், எல்லோரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. நீ முஸ்லிம், நீ இந்து, நீ அந்த ஜாதி, இந்த ஜாதி உன்னை ஆஸ்பிட்டலில் சேர்க்க மாட்டேன் என்று எல்லாம் சொல்ல முடியாது. நாம் மனிதர்களாகத்தான் கொரோனாவை எதிர்க்க முடியும். நாம் அந்த மனிதத்தை கற்றுக்கொள்ளவில்லை என்றால், நமது மனித குலமே நல்ல பாதையில் போகாது என்பது நான் நம்புகிற விஷயம். அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு காங்கிரஸுடைய சித்தாந்தம்தான் சரியான சித்தாந்தம்.

கேள்வி: காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியின் துணை அமைபுகளுக்கு பயிற்சி அளிப்பது, அவற்றை சரியான பாதையில் வழிநடத்துவது என்பதுதான் உங்களுக்கான பணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் காங்கிரஸ் துணை அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கவும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எந்த மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்.

சசிகாந்த் செந்தில்: முதலில் ரெண்டு விஷயம். ஒன்று காங்கிரஸின் அடித்தளங்களை எல்லோருக்கும் நினைவூட்ட வேண்டும். காங்கிரஸ் என்பது ஒரு மக்கள் பேரியக்கம். சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்பதற்கு சேர்ந்த கூட்டம் என்கிற அதே நேரத்த்ல் இண்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும் சேர்ந்த கூட்டம்தான் காங்கிரஸ். இப்போது, காங்கிரஸின் அடித்தளம் பற்றிய நினைவுகள் கொஞ்சம் மறந்துபோய்விட்டதாக நினைக்கிறேன். அதனால், அதை புதுப்பிக்க வேண்டும்.

காங்கிரஸில் எல்லோரும் காரியகர்த்தாக்கள், ஒவ்வொரு காரியகர்த்தாவும் ஒரு சேவகர். நாம் ஒரு சேவகராக அந்த சித்தாந்தத்தை மறுபடியும் புகட்ட வேண்டும். காங்கிரஸ் சித்தாந்தம் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் சந்ததிகளுக்கும் எவ்வளவும் முக்கியம் என்பதை நாம் சொல்ல வேண்டும். அதை நினைவூட்டுவதற்கு அவர்களுக்கு நிறைய கலந்துரையாடல் வேண்டும். அந்த வேலையை நான் செய்வேன்.

இராண்டாவது, இந்த கட்டமைப்பில் இருக்கிற ஒரு சில விஷயங்கள், ஒரு 50 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்ததினால், சில கட்டமைப்பு ரீதியான பிரச்னைகள் வந்திருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். அடுத்து, இளைய தலைமுறையை இந்த சித்தாந்தத்துக்குள் ஈர்க்க வேண்டும்.

இங்கே பல வெறுப்பு சித்தாந்தங்கள் வளர்ந்திருக்கிறது. மதம், மொழி, சாதி ரீதியாக நீ இங்கே வாழலாமா ஆளலாமா என்று தேவையில்லாத கேள்விகள் எழுந்துகொண்டிருக்கிறது. இந்த சித்தாந்தங்களை நோக்கி இளைஞர்களை விழாமல் பார்த்துக்கொள்வது காங்கிரஸினுடைய பொறுப்பு என்று நான் கூறுகிறேன்.

அதனால், காங்கிரஸ் துணை அமைப்புகளுக்கு நிறைய பயிற்சி வகுப்புகள், கலந்துரையாடல்கள், சித்தாந்த ரீதியான பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதே போல, அரசியல் என்றால், என்னைப் பொறுத்தவரை மக்களுடைய பிரச்னைகளுக்கா நிற்பதுதான் அரசியல். அத்தகைய அரசியலை காங்கிரஸ் சரியாக செய்ய வேண்டும் என்பது என்னுடைய முனைப்பு.

கேள்வி: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் அத்தகைய சித்தாந்தத்தை இடையில் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?

சசிகாந்த் செந்தில்: இதை நான் தமிழ்நாட்டில் மட்டும் சொல்ல வரவில்லை. இது இந்தியா முழுவதும் ஒரு 50-60 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும்போது ஏற்பட்ட மறதிக்கு நான் காங்கிரஸ் காரணமாக நான் பார்க்கவில்லை. அதற்கு என்னைப் போன்றவர்கள்தான் காரணம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நாம் ஒரு 50 வருடமாக அரசியலுக்கே போகவில்லை. எனக்கு சின்ன வயதில் என்ன சொல்லி வளர்த்தார்கள் என்றால் அரசியல் பக்கம் மட்டும் போய்விடக்கூடாது என்றார்கள். ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது, என்னைப் போன்றவர்களும் நல்லது நினைப்பவர்களும் அரசியலை விட்டு விலகிப் போகும்போது, அந்த இடத்தை யாரோ ஒருத்தர் கைப்பற்றப் போகிறார்கள். அதனால், நான் எனக்கு இருக்கிற நேரத்தில் நான் அதை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினுடைய எதிர்காலம் எப்படி இருக்கிறது என்று கருதுகிறீர்கள்? ஏனென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இல்லையா,

சசிகாந்த் செந்தில்: என்னைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸை ஒரு கட்சியாக பார்ப்பதோடு அதை ஒரு சித்தாந்தமாக பாருங்கள். எல்லோரும் சமமாம இருக்க வேண்டும். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம். கொஞ்சம் கஷ்டப்படறவங்க எல்லோரையும் மேலே கூட்டிக்கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிற ஒரு சித்தாந்தம். யாரையும் எந்த ஒரு குழுவினரையும் மோசமானவர்கள், கெட்டவர்கள் என்று சொல்லாத சித்தாந்தம் இது. இந்தியர்களாக இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களாக இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் நல்லதை நினைக்கிற ஒரு சித்தாந்தம். என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல் செய்வதற்கு ஒரு நல்ல சித்தாந்தம் கிடைக்காது.

மற்ற கட்சிகள் போல, இவர்கள் சரியில்லை, அவர்கள் சரியில்லை. அவர்களை அடிக்க வேண்டும் இவர்களை அடிக்க வேண்டும் என்கிற மாதிரி இல்லாமல், நீங்களும் முன்னாடி செல்லுங்கள், எல்லோரையும் கூட்டிட்டு செல்லுங்கள் என்று சொல்வது மிகப்பெரிய நல்ல விஷயம். அதனால், தமிழகத்தில் ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவுக்கும்தான். ஏனென்றால், காங்கிரஸ்தான் இந்தியா.

கேள்வி: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறி வந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக அந்த குரலும் இப்போது மங்கிப்போய்விட்டது. அதனால், காங்கிரஸ் எந்த முழக்கத்தை வைத்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பிடிப்போம் என்று சொல்வார்கள்?

சசிகாந்த் செந்தில்: காங்கிரஸ் முழக்கத்தை வைத்து, தலைவர்களின் படங்களை முன்னே செல்வதைவிட காங்கிரஸ் அவர்களின் கால்களை நம்பவேண்டும். நடப்பதுதான் காங்கிரஸ். காரில் சென்று போராட்டம் செய்வதோ, இல்லை காமராஜரை திரும்பத் திரும்ப சொல்வதனாலோ, அல்லது காந்தி போட்டோவை வைத்து முன்னால் படுத்துக்கொள்வதாலோ காங்கிரஸ் வாழவில்லை. காங்கிரஸ் சித்தாந்தத்தை நம்புபவர்கள் மானுட சித்தாந்தத்தை நம்புபவர்கள், காங்கிரஸ் தனது கால்களில் நடந்து செல்ல வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். அவர்களுடன் பேச வேண்டும். புரியவைக்க வேண்டும். அதில் மக்கள் கொடுக்கிற தீர்ப்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் சொல்வதை தாழ்மையுடன் உள்வாங்கிக்கொண்டு தவறுகளைப் புரிந்துகொண்டு அந்த மக்களிடம் இந்த சித்தாந்தத்தை கொண்டு போய் சேர்ப்பதுதான் காங்கிரஸ். நான் அதைத்தான் நம்புகிறான். இந்த முழக்கங்களை எல்லாம் நம்பவில்லை. இரண்டாவது, முன்னாடி எப்படி இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் அதை தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. மக்களுடன் தொடர்பு ஏற்பட வேண்டும். அப்படி இல்லை என்றால், அரசியலே இல்லை என்று நான் நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல் என்பதே அதிகாரத்துக்கு வருவது மட்டுமே அரசியல் கிடையாது. மக்கள்கிட்ட நீங்கள் இருக்கிறீர்களா என்பதுதான் அரசியல். நமக்கு ஒரு பிரச்னை என்றால் காங்கிரஸ்காரர்கள் வருவார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றால் அப்போது நீங்கள் அரசியல் செய்கிறீர்கள். அப்படி மக்கள் நம்பாதபோது நீங்கள் அரசியல் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்கான ஒரு வழிகாட்டுதலாகத்தான் நான் இருப்பேன். அதற்கு என்ன முடியுமோ அதை செய்வோம்.

கேள்வி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் இப்படியேதான் தொடருமா? இல்லை முன்னால் வருவதற்கு காங்கிரஸ் ஏதேனும் திட்டங்களை வைத்திருக்கிறதா?

சசிகாந்த் செந்தில்: நாம் நம்முடைய அடிப்படையை மறந்துவிட்டோம் என்றால் நாம் நம்முடைய அடித்தளத்தை இழந்துவிடுகிறோம். நம்முடைய அடிப்படை என்ன என்பது குறித்து மறுபடியும் ஒரு ஞாபகம் வந்தது என்றால் சரியாகிவிடும். இதெல்லாம் இந்த அதிகார அரசியலின் பிரச்னைகள். கடந்த 50 ஆண்டுகளாக அப்படி இருந்துவிட்டோம். அப்போது எந்த கேள்வியும் வரவில்லை. ஆனால், இப்போது மத்தியில் நம்முடைய சித்தாந்தத்துக்கே ஒரு பெரிய எதிரி வந்து ஆட்சியில் அமர்ந்துவிட்டார்கள். இனிமேலும் நாம் அப்படி இருக்க முடியாது.

காங்கிரஸுடைய திட்டங்கள் என்று கேட்டால், எனக்கு இருக்கிற திட்டங்களை நான் சொல்கிறேன். ஒரு சிறிய நிறுவனம் என்றால் வேலைகளைப் பிரித்து கொடுத்து திட்டமிட்டு செய்யலாம். ஆனால், இது மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். இதை நாம் ஒரு திட்டமாக எல்லாம் தீட்ட முடியாது. ஒரு திசையை நோக்கித்தான் நாம் போக முடியும். அவர்கள் நம்முடன் வருகிறார்களா என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். நம் மீது நம்பிக்கை இருந்தால் வரப்போகிறார்கள். அதனால், அந்த திசையில் நாம் வேலை செய்ய வேண்டும்.

உதாரணமாக, பெரியார் ஒரு திசையை நோக்கித்தான் நகர்ந்தார். அவர் ஒரு பெரிய திட்டம் எல்லாம் தீட்டவில்லை. என்னுடைய தலைமுறை வரை அந்த சித்தாந்தம் ஆழமாக பதிகிறது என்றால், அந்த சித்தாந்தத்தை ஒரு திட்டம் தீட்டி வகுக்க முடியாது. அதிகார அரசியலில் இருப்பவர்கள் அந்த முடிவை எடுப்பார்கள். அதற்காக, அதிகார அரசியலே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், எது முன்னாடி எது பின்னாடி என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அதிகார அரசியல் முன்னாடி, சித்தாந்த அரசியல் பின்னாடி என்று ஆகிவிட்டால் குளறுபடிகள் வரும்.

என்னுடைய திட்டம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் காங்கிரஸின் உண்மையான தொண்டர்களை மறுபடியும் சந்தித்து அவர்களின் அந்த சித்தாந்த தெளிவை மறுபடியும் புதுப்பித்து மக்களிடம் அனுப்புவோம்.

அதே போல, திராவிடக் கட்சிகளின் சித்தாந்தமும் காங்கிரஸின் சித்தாந்தமும் நிறைய இடங்களில் ஒத்துப்போகும். சமூகநீதி, பன்முகத்தன்மை ஆகியவற்றில் ஒத்துப்போகும். அதனால்தான், கூட்டணி அமைக்கிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் அது வேறுபடும். காங்கிரஸ் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று சொல்வோம். திராவிடக் கட்சிகள் அதை அப்படி ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். அதனால், அங்கேயும் சித்தாந்த பிரச்னைகள் இருக்கிறது. ஆனால், காலத்தின் கட்டாயம், நாம் என்ன செய்கிறோம், யாரை எதிர்க்கிறோம். என்பதுதான் கூட்டணிகளை முடிவு செய்கிறது.

இன்றைக்கு பாஜக என்ற ஒரு வெறுப்பு பிரச்சார நாடக கம்பெனி முன்னாள் நிற்கிறபோது, அதை எதிர்த்து எல்லோரும் கை கோர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லோரும் கைகோர்ப்போம். அதில் எந்த பிரச்னையும் இல்லை.

இது வரும் காலங்களில் இது அப்படியேதான் போகுமா என்றால் அப்படி இல்லை. மக்கள் எந்த பக்கம் செல்கிறார்களோ அது அவர்களின் முடிவு.

கேள்வி: காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நீங்கள் கட்சியின் துணை அமைப்புகளுக்கு என்ன மாதிரியான பயிற்சிகளை நடத்த இருக்கிறீர்கள்?

சசிகாந்த் செந்தில்: முதலில் அவர்களை சந்திக்க வேண்டும். ஏனென்றால், காங்கிரஸில் ஒரு 30 துணை அமைப்புகளுக்கு மேல் இருக்கிறது. இளைஞர் காங்கிரஸ், மனித உரிமைகள் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மீனவர் காங்கிரஸ் என நிறைய துணை அமைப்புகள் இருக்கிறது. அவர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் செய்யும் வேலையை முன்வைக்க வேண்டும். அதிகார அரசியலுக்கு வராமல் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை எடுத்து செயல்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் முதன்மை அமைப்பின் அங்கத்தினார்களாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும். அவர்களிடம் இருணநது நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கும். பிறகு, ஒரு குடும்பமாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு வாங்க செயல்படுவோம் என்று ஒரு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். எல்லோரையும் ஒருங்கிணைப்பது என்பது ஒரு பெரிய வேலைதான். நிச்சயமாக 100 சதவீதம் செய்வேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் பாஜக சமூக ஊடகங்களில் எப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால், ஒரு நூற்றாண்டு கால அடித்தளத்தை கொண்டுள்ள காங்கிர அதற்கு சரியான பதிலடியை கொடுக்கவில்லை என்ற பார்வை இங்கே இருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்.

சசிகாந்த் செந்தில்: பாஜக சமூக ஊடக பிரசாரத்துக்கு ஒரு அமைப்பாக்கப்பட்ட நிறுவனத்தை எல்லாம் வைத்து செய்கிறார்கள். அவர்கள் பொய்களையும் பித்தாலாட்டங்களையும் ரொம்ப எளிதாக பரப்பி விடலாம். அவர்களின் பொய் பிரசாரங்கள் வேகமாக பரவலாம். அது பாஜகவின் அரசியல். ஆனால், நல்ல விஷயங்கள் மெதுவாகத்தான் பரவும்.

உதாரணத்துக்கு ஒரு ஃபாதர் தவறாக பேசுகிறார். அது சமூக ஊடகங்களில் பரவியதும் தமிழக அரசு உடனடியாக அவரை கைது செய்கிறது. ஆனால், பாஜகவின் மாநில தலைவர் ஒரு ட்வீட் போடுகிறார். இந்துக்களை இழிவுபடுத்திப் பேசிய ஃபாதர் என்று ட்வீட் செய்கிறார். அப்போது அவர்களுடைய எண்ணம் என்ன? அவர்கள், நாடார் சமுதாயத்தை எதிர்த்து தமிழகமே இருப்பது போலவும் இந்து மதத்தை எதிர்த்து கிறிஸ்தவர்கள் இருப்பது போலவும் ஒரு அச்சத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் செய்கிற இப்படியான பிரசாரம் செய்வது எளிதாக செய்யலாம். அவர்களைப் பொறுத்தவரை இதுதான் சோசியல் மீடியா. ஆனால், நான் என்ன நினைக்கிறேன் என்றால், காங்கிரஸ் கட்சியினர் சோசியல் மீடியாவைவிட களத்தில் வேலைகள் செய்ய வேண்டும். சோசியல் மீடியா என்பது ஒரு பெரிய நீரோடை, அதில், நீங்கள் நல்ல வேலைகளை செய்தால் அதில் உள்ள மக்களே உங்களை புரோமோட் செய்வார்கள். வேலைகள் செய்யாத வரை சோசியல் மீடியாவில் போடுவதற்கு எதுவும் இருக்காது. அதனால், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அதை தொண்டர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பிறகு சோசியல் மீடியா நம்மை பின் தொடரும். அதற்கான முன்னெடுப்புகளை நான் எடுப்பேன். அதில் எனக்கு அனுபவங்கள் இருக்கிறது. ஆனால், அது முக்கியம் அல்ல. முக்கியமானது என்ன என்றால், காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி மக்களுடன் நிற்கிறதா என்பதுதான் முக்கியம். காங்கிரஸ் கட்சி மக்களுடன் களத்தில் நிற்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Congress Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment