திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கந்து வட்டி கொடுமையே இதற்கு காரணம்!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகரின் மையப் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கிறது. திங்கட்கிழமை என்பதால் இன்று (23-ம் தேதி) வழக்கம்போல மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்வை நடத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த பதற்ற நிகழ்வு அரங்கேறியது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா(2). இசக்கிமுத்து இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை வந்தார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க அவர் வந்ததாக தெரிகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். மனுக்கள் கொடுக்க வந்த ஏராளமானோரும் அங்கு நின்றனர்.
திடீரென இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் தான் தயாராக வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தீக்காயம் என்பதால், அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
திருநெல்வேலி போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இவர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் மிரட்டல் விடுத்ததாகவும், இதன்காரணமாகவே 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1 லட்சத்தில் 40 ஆயிரம் ரூபாய்க்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வரை வட்டி கட்டி விட்டதாகவும் தீ குளித்தவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் கந்து வட்டியை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியிருக்கிறார்.