பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை

பிரபல சுற்றுலாத் தளமான பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு நான்கு நேரடி விமானங்களை தாய் ஏர் ஏசியா நிறுவனம் இயக்கவுள்ளது.

பிரபல சுற்றுலாத் தளமான பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு நான்கு நேரடி விமானங்களை தாய் ஏர் ஏசியா நிறுவனம் இயக்கவுள்ளது.

மலேசியாவின் ஏர் ஏசியா மற்றும் தாய்லாந்தின் ஏசியா ஏவியேஷன் ஆகியவற்றின் கூட்டு விமான சேவை நிறுவனமான தாய் ஏர் ஏசியா, பாங்காக்கில் இருந்து வாரத்திற்கு நான்கு நேரடி விமானங்களை திருச்சிக்கு இயக்கவுள்ளது.

பாங்காக்கின் டான் மியாங் சர்வதேசவிமான நிலையத்தில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளது. எஃப்டி 110 என்ற அந்த விமானம் திருச்சிக்கு இரவு 11.55 மணியளவில் வந்து சேரும் எனவும், எஃப்டி 111 என்ற எண்ணில் மீண்டும் அதிகாலை 12.55 மணிக்கு கிளம்பிச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சேவை வருகிற செப்டம்பர் மாதம் 29-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதேபோல், பாங்காக்கில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கும் தாய் ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவை வழங்கவுள்ளது.

பிரபலமான மற்றும் மலிவான சுற்றுலா தளமாக தாய்லாந்து விளங்குவதால், இதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என சுற்றுலா ஏஜென்ட்டுகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பாங்காக் செல்லவேண்டும் என்றால், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகளை சுற்றியே செல்ல வேண்டும். தற்போது, நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படுதுவதன் மூலம், திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு நான்கு மணி நேரத்துக்கும் உள்ளாகவே சென்று விடலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாங்காக் – திருச்சி விமான சேவை மூலம் திருச்சியில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை 98-லிருந்து, 102-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஏர் ஏசியா, மலின்டோ, ஸ்ரீலங்கன், டைகர் ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் கோலாலம்பூர், கொழும்பு, சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா ஆகிய நாடுகளுக்கு விமான சேவை அளித்து வருகின்றன. அது தவிர, திருச்சியில் இருந்து உள்ளூர் விமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தாய்லாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கலாசாரம் உள்ளிட்ட நெருக்கமான உறவுகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. அங்கு ஏராளமான தமிழர்கள் உணவு விடுதி வைத்துள்ளனர். கண்டிப்பாக, தாய்லாந்து தமிழர்களுக்கு மற்றொரு வீடாகத் தான் இருக்கும் என விமான சேவை நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close