தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான இலவச திட்டங்கள் இடம் பெற்றன.
தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இலவச திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டன. அதுபோல் கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் பொருளாதாரத்தை மேம்படுத் தும் வகையில் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. அதன்படி ஆடு பெறக்கூடிய பயனாளிக்கு 4 ஆடுகளும், மாடு பெறக்கூடிய பயனாளிக்கு ஒரு கறவை பசு மாடும் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கிராமப் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பயன் பெற்று வந்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை மூலம் இலவச ஆடு, மாடுகள் வழங்கப்பட்டன. ஆனால், வறட்சி காரணமாக ஏற்பட்ட தீவனத் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அதனையடுத்து, ஜூலை முதல் (இம்மாதம்) மீண்டும் திட்டத்தை செயல்படுத்தப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில்,"விலையில்லா ஆடுகள் திட்டம், 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய மழை பெய்ததும் மீண்டும் திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.