தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை தொடக்கம்

தமிழக அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் ஆகும். பல்வேறு காரணங்களால் செயலிழந்து கிடந்த அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு புத்துயிரூட்டப்பட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என கடந்த 2011-ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச் சேவையை சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதே ஆண்டும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவை கடந்த 2012-ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் 90 – 100 சேனல்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு தற்போதைய நிலவரப்படி, சுமார் 70 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவன சேவை அனலாக் முறையில் மேற்கொள்ளப்பட்டதால், தனியாருக்கு இணையாக துல்லியமான காட்சிகளை வழங்க முடியவில்லை. எனவே, அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி கோரி மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத் திடம் விண்ணப்பித்திருந்தது. பல ஆண்டு நிலுவைக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று இதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், இந்நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னலைப் பெற்று தொடர்ந்து தொழில் செய்வதற்கு பதிவு செய்து வந்தனர்.

இதற்கென சென்னை நுங்கம்பாக்கத்தில் எம்பிஇஜி 4 தொழில் நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை பெற செட்டாப் பாக்ஸ் அவசியம் என்பதால், அதனை பெறுவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அரசு கேபிள் டிவி நிறுவனம் அண்மையில் கோரியது.

முதல்கட்டமாக, சில ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வந்து விட்டதாக தெரிகிறது. எனவே, விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் திட்டத்தையும், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.

இதன் அடையாளமாக, 32 மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேருக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கிய முதல்வர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையினை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பவியல் முதன்மை செயலர் ராமச்சந்திரன், கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் குமரகுருபரன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.1,500-க்கு கொள்முதல் செய்யப்படும் இந்த செட்டாப்பாக்ஸ்கள் பொதுமக்கள் நலன் கருதி விலையின்றி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 180 சேனல்களை ரூ.120 கட்டணத்தில் பார்க்கலாம். மேலும், தனியார் நிறுவனங்கள் போல் 4 தனித்தனி பேக்கேஜ்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ.125 முதல் ரூ.275 வரையிலான விலையில், ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்துடன் சேர்த்து கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close