சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் இலவச வை-பை

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலவச வை-பை சேவை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் இலவச வை-பை சேவை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையும், சின்னமலை முதல் விமானநிலையம் வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பறக்கும் பாதை மட்டுமல்லாமல் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு – நேரு பூங்கா இடையேயான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது.

அதேபோல், ஏனைய இடங்களில் மெட்ரோ ரயில் சேவை அளிக்கும் பொருட்டு நகரத்தின் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ள கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் இலவச வை-பை சேவை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கும் அந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெற்று வை-பை சேவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மெட்ரோ பயனாளர்களை ஈர்க்கும் பொருட்டு முதலில் இந்த சேவையை இலவசமாக வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. “முதலில் சாதாரண மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த சேவையை வழங்க நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பின்னர், சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும்” என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, கூடிய விரைவில் மெட்ரோ ரயில்களிலும் இச் சேவையை வழங்க கவனம் செலுத்தப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

டெல்லி, பெங்களூரு நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்கனவே வை-பை வசதி உள்ளது. அந் நகரங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் வை-பை சேவை தொடங்கப்படவுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வை-பை வசதி அறிமுகப்படுத்தப்படும் என்ற செய்தி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

“மெட்ரோ ரயில் நிலையங்களில் வை-பை சேவை வழங்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. ரயில் பயணத்துக்கு ஏற்கனவே கூடுதல் கட்டணம் செலுத்தி வருவதால், இச்சேவை இலவசமாக தான் வழங்கப்பட வேண்டும்” என மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் நபர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close