நண்பேன்டா..! கோட்டையில் கொண்டாடிய விஷால் -அன்பில் மகேஷ்

கோட்டைக்கு வந்த நடிகர் விஷால், மகேஷ் பொய்யாமொழியுடன் தனது நட்பை கொண்டாடியது அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

கோட்டைக்கு வந்த நடிகர் விஷால், மகேஷ் பொய்யாமொழியுடன் தனது நட்பை கொண்டாடியது அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என இரு ஆடுகளங்களை பார்த்துவிட்ட நடிகர் விஷாலின் அடுத்த குறி அரசியல்தான் என கோடம்பாக்கமே ஜோதிடம் சொல்கிறது. நடிகர் சங்கத் தேர்தலின்போதே விஷால், தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. அதற்கு காரணம் பூச்சி முருகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் விஷாலுக்கு துணையாக நின்றதும், எதிரணியில் அப்போதைய அ.தி.மு.க. அபிமானிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் நின்றதும்தான்.
தவிர, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதிக்கும் விஷாலுக்கும் நட்பு உண்டு. உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் தி.மு.க. இளைஞரணி துணை செயலாளரும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் விஷாலுடன் நல்ல அறிமுகம் உண்டு.
இந்தச் சூழலில் ஜூலை 13-ம் தேதி காலையில் சட்டமன்றம் கூடிய நேரத்தில் இயக்குனர் செல்வமணியும், நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷாலும் கோட்டைக்கு வந்தனர். சினிமாக்களுக்கான கேளிக்கை வரி ரத்து தொடர்பாக சினிமாத்துறை சார்பிலும் அரசு சார்பிலும் தலா ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த அண்மையில் முடிவெடுக்கப்பட்டது. வருகிற 24-ம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் இது தொடர்பாக திரையுலக பிரமுகர்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெர்வித்துவிட்டு, அரசுப் பிரதிநிதிகளுடன் பேசும் தேதியை முடிவு செய்வதுதான் விஷால் வருகையின் நோக்கம்!
ஆனால் அவர் வந்த நேரத்தில் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கண்டதும் விஷால் குஷியானார். இருவரும், ‘நண்பேன்டா’ ஸ்டைலில் கட்டிப் பிடித்து குசலம் விசாரித்துக் கொண்டனர்.
முழுக்க இது நட்புக் கொண்டாட்டம்தான் என்றாலும், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் பொறாமை பொங்க இதை பார்த்துச் சென்றனர். அவர்களில் ஒருவர் உதிர்த்த வாசகம், ‘அம்மா இருந்தா, இந்த சினிமாக்காரங்களுக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்குமா?’
உடனே அருகிலிருந்த மீடியாக்காரர் ஒருவர் கேட்டார்… ‘அம்மா இருந்திருந்தால், எதிர்கட்சி துணைத்தலைவரான துரைமுருகனை, ‘இளம் துருக்கியர்’ என சட்டமன்றத்தில் வர்ணிக்கும் தைரியம் ஒரு அமைச்சருக்கு வந்திருக்குமா?’
எல்லாமே காலம் உருவாக்கிய மாற்றங்கள்தான்!

×Close
×Close