போயஸ் கார்டனை மையம் கொண்டவர்கள், இனி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் வரிசை கட்ட வேண்டியிருக்கிறது.
வி.கே.சசிகலாவின் உறவு வட்டாரங்களை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய 5 நாள் மெகா ரெய்டு இன்று (நவம்பர் 13) மாலை முடிவுக்கு வந்தது. மொத்தம் 187 இடங்களில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், அங்கு கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதன் அடுத்தகட்டமாக அந்த ஆவணங்கள் அடிப்படையில் ஒவ்வொருவரையாக அழைத்து விசாரிக்க இருக்கிறார்கள். இதற்காக யார், யாருக்கு சம்மன் அனுப்புவது? என பட்டியல் இட்டு வருகிறார்கள். குறைந்தபட்சம் 200 பேர் வரை விசாரிக்க இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலத்தில் இந்த விசாரணை நடைபெற இருக்கிறது. இவ்வளவு நாளும் போயஸ் கார்டனை வலம் வந்தவர்கள், இனி நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலத்தை சுற்றி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இதில் முதல் நபராக, அதிமுக கர்நாடக மாநில செயலாளரும் டி.டி.வி. தினகரனின் முக்கிய ஆதரவாளருமான புகழேந்தியை இன்று வருமான வரித்துறையினர் அழைத்தனர். இவரது பெங்களூரு இல்லத்தில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அப்போது அதிகாரிகள் கைப்பற்றிய சில ஆவணங்கள் தொடர்பாக விசாரிக்கவே புகழேந்தியை அழைத்ததாக கூறப்படுகிறது. இன்று முற்பகலில் விசாரணைக்கு ஆஜரான புகழேந்தியிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். பிறகு மீண்டும் நாளை மறுநாள் (15-ம் தேதி) சில ஆவணங்களுடன் விசாரணைக்கு வரும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
விசாரணை முடிந்து வெளியே வந்த புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிகாரிகள் எடுத்துச் செல்ல என்னிடம் எதுவும் இல்லை. என்னை விசாரணைக்கு அழைத்ததால், முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்களும் ஒத்துழைப்புடன் விசாரித்தார்கள். மீண்டும் நாளை மறுநாள் வருவேன்.
நான் அவர்கள் கைப்பற்றும் அளவுக்கு பெரிய அளவில் தொழில் எதுவும் செய்யவில்லை. எனவே அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. வருமான வரித்துறை விசாரணை குறித்து முழுமையாக சொல்வது முறையல்ல’ என்றார் அவர்.
புகழேந்தியைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மருத்துவரும் சசிகலாவின் அண்ணன் மருமகனுமான டாக்டர் சிவகுமாரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்தனர். அவரும் நுங்கம்பாக்கம் அலுவலகம் வந்தார். அதேபோல ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனும் அழைக்கப்பட்டார். இவர்கள் இருவரும் மீடியா கண்ணில் படாமல் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகம் வந்து சென்றனர்.
அவர்களிடம் விசாரித்த தகவல்கள் அடிப்படையில், இன்று மாலை 5 மணிக்கு முக்கிய திருப்பமாக ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ஏற்கனவே சிவகுமார், பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரித்த சில தகவல்கள் அடிப்படையில் விவேக்கிடம் கேள்வி எழுப்பவே இந்த அவசர விசாரணை என கூறப்படுகிறது.
ஜெயா டிவி சி.இ.ஓ. விவேக்கை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். | #இதுவும்_கடந்துபோகும் #JayaTV #ITRaid #feelingangry
— Abdul Samathu N (@AbdulsamathuN) November 13, 2017
தவிர, மொத்த ரெய்டிலும் மையமாக அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பவர் விவேக் ஜெயராமன் தான்! எனவே இவரிடம் நடைபெறும் விசாரணை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து சசிகலா உறவினர்கள் வரிசையாக அழைக்கப்பட இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.