கடல் சீற்றம், கடல் உள்வாங்குதல் நீர்மட்டத் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக, திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. அப்போதெல்லாம், விவேகானந்தர் மண்டபம் வரையே படகுகள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு அருகே சென்று பார்க்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகின்றது. எனவே, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஆகியோர், கன்னியாகுமரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, அவரிடம் இந்த இணைப்புப் பாலம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், மத்திய சுற்றுலாத்துறையின் கடற்கரைச் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டமான ‘சுவதேஷ் தர்ஷன்’ என்ற திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக, மத்திய சுற்றுலாத்துறை தமிழ்நாட்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதன் மூலம், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைப்பாலம் அமைக்கப்பட உள்ளது. கடலுக்கு நடுவில் அமையும் இந்த நடைபாலம், 95 மீட்டர் நீளத்திலும், கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படும். 8 ராட்சத தூண்களைக் கடலுக்குள் அமைத்து இது உருவாக்கப்படும். எனவே, இனி இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலங்களிலும், எந்தத் தடையுமின்றி பார்வையாளர்கள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியும்.