என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குக: ராமதாஸ் வலியுறுத்தல்

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அந்த நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பாமகவின் முயற்சியால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க ஆணையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

இந்தியாவின் தலைசிறந்த நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக திகழும் என்.எல்.சி நிறுவனம் தானாக உருவாகிவிடவில்லை. நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள 23 கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளையும், விளைநிலங்களையும் விட்டுக் கொடுத்ததால்தான் என்.எல்.சி. நிறுவனம் உருவானது. இத்தகைய நிறுவனம் உருவானால் தங்கள் பகுதி வளர்ச்சி அடையும்; தங்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இப்படி ஒரு தியாகத்தை செய்தனர்.

ஆனால், தொடக்கத்தில் நிலம் வழங்கியவர்களுக்குக் கூட இன்னும் முழுமையாக வேலை வழங்கப்படவில்லை. இதற்காக பாமக சார்பில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 29.06.2017 அன்று கூட அன்புமணி தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. பாமகவைச் சேர்ந்த என்.டி. சண்முகம் நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த போது நிலம் கொடுத்தவர்களில் 150 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாமக சார்பில் நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாகவும், தொழிற்சங்கங்களின் வலியுறுத்தல் காரணமாகவும் 2009-ஆம் ஆண்டில் அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சீதாராமன் தலைமையில் நடந்த பேச்சுக்களின் போது நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக அப்போதே ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. ஆனால், அதன்பின் 8 ஆண்டுகளாகியும் அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த என்.எல்.சி. முன்வராத நிலையில் தான் ஜீவா தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கில், என்.எல்.சிக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் போது அவர்களில் 50% இடங்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை என்.எல்.சி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

நெய்வேலியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் தந்த நிலங்களை முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம் இப்போது அதன் உண்மையான பங்குதாரர்களை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டது. என்.எல்.சி.யில் மண்ணின் மைந்தர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே ஊதியம் வழங்கப் படுகிறது. இவர்களை படிப்படியாக பணி நிலைப்பு செய்யும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் அதை என்.எல்.சி. இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கெனவே வேலை வழங்கப்பட்டு வந்த நாட்களின் எண்ணிக்கையை 26-லிருந்து 19 ஆக குறைத்து விட்டது. அதற்கு பதிலாக வட இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை ஒப்பந்த ஊழியர்களாக நியமித்து வருகிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத பெருந்துரோகமாகும்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை என்.எல்.சி தலைவரும், பெரும்பான்மையான இயக்குனர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பின்னர் இந்த வழக்கம் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டு, நிர்வாக உயர் பதவிகளில் வட இந்தியர்கள் திணிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக பொறியாளர்கள், அதிகாரிகள் போன்ற பதவிகளும் வட இந்தியருக்கே வழங்கப்பட்டன. தொழிலாளர் பணியிடங்கள் மட்டும் தான் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இப்போது அதையும் பறிக்கும் வகையில் அந்த பணியிடங்களும் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எதேச்சையாக நடப்பவை அல்ல. என்.எல்.சி.யை தமிழரிடமிருந்து பறிப்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

என்.எல்.சியின் லாபம் முழுவதும் தமிழகத்திலிருந்து தான் கிடைக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக ரூ.2500 கோடி லாபம் கிடைக்கும் நிலையில், அதை தமிழகத்தில் முதலீடு செய்வது தான் முறையாக இருக்கும். ஆனால், ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக அங்குள்ள நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிய என்.எல்.சி, விவசாயிகளின் நிலங்களுக்கு கூடுதல் விலை வழங்கவும், அனல்மின் திட்டத்தை செயல்படுத்தவும் மறுக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகில் 4000 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்திருந்த என்.எல்.சி இப்போது அத்திட்டத்தை ஒடிஷா மாநிலத்திற்கு மாற்றப்போவதாக கூறியுள்ளது. காரணம். நிறுவனத்தின் தலைவராக உள்ள ஆச்சார்யா ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தான்.

தமிழகத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு சத்தீஷ்கர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் என்.எல்.சி முதலீடு செய்துள்ளது. இதற்கு வசதியாகத் தான் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற அதன் பெயரை என்.எல்.சி இந்தியா என மாற்றி அடையாளத்தை அழித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்திருக்க வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள் தங்கள் பதவியை காக்க மத்திய ஆட்சியாளர்களின் காலில் விழுந்து கிடக்கின்றனர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழகத்தின் அடையாளம். அது பாட்டாளிகளின் சொத்து. அதை அபகரிக்கவும், அடையாளத்தை அழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பாமக அனுமதிக்காது.

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதுடன், தொழிலாளர் முதல் அதிகாரிகள் வரை அனைத்து பணிகளிலும் நிலம் தந்தவர்களின் வாரிசுகளுக்கும், மண்ணின் மைந்தர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலைவர் மற்றும் இயக்குனர் பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

×Close
×Close