தலித் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், துன்பங்கள், துயரங்கள் போன்ற அசம்பாவிதங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள தலித் இன மக்களும் முழுமையாக கல்வி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும், அதன் முலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே போல தலித் இன மக்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு இருக்க வேண்டும். மேலும் தலித் இன மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள், உதவிகள் ஆகியவை முழுமையாக அவர்களுக்கு சென்றடைய வேண்டும்.
குறிப்பாக தலித் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள், கொடுமைகள், அசம்பாவிதங்கள் போன்றவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் 2014-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் சுமார் 32 ஆயிரம் தலித் இன மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 5 ஆயிரத்து 300 பேர் தமிழகத்தைச் சேர்ந்த தலித் இன மக்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற செய்தியும் வேதனைக்குரியது.
இவ்வாறு இவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் போது பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகாரானது பதிவு செய்யப்படுவதில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. யாராக இருந்தாலும் புகார் அளிக்க வரும் நபர் கொடுக்கும் புகாரை முதலில் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் நியதி. இதில் தலித் என்பதற்காக புகாரைப் பதிவு செய்ய காவல் துறையினர் மறுத்தால் ஆளும் ஆட்சியாளர்கள், கடமை தவறிய காவல் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தலித் இன மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய 18 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக கொடுக்கப்படவில்லை. அதே போல அரசு வங்கி மற்றும் அரசுத்துறையின் வேலை வாய்ப்பில் தலித் மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு முறை முழுமையாக பயன்படுத்தப்படாமல், பல பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் பணி உயர்வும் உரிய காலத்தில் வழங்கப்படாமல் உள்ளது.
தலித் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தின் வருட வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் படிப்பிற்குண்டான கல்லூரிக் கட்டணத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்வது நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுவரையில் அதற்கான கட்டணத்தில் சுமார் 1,400 கோடி ரூபாயை மத்திய அரசு கல்லூரிகளுக்கு பாக்கி வைத்திருப்பதால் அந்த கல்லூரி நிர்வாகம் படிப்பை முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழை தர மறுக்கிறது.
எனவே மத்திய அரசு தலித் இனத்தைச் சேர்ந்த மாணவர்களின் படிப்புக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை கல்லூரிகளுக்கு உடனடியாகக் கொடுக்க வேண்டும். இந்த நிலுவைத்தொகைக்காக மாணவர்களுக்கு சான்றிதழைக் கொடுக்க மறுக்கின்ற கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் தலித் இன மக்களுக்கு உரிய சலுகைகள், உதவிகள், திட்டங்கள் போன்றவற்றை தொடர் நடவடிக்கையின் மூலம் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். மேலும் தலித் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், துன்பங்கள், துயரங்கள் போன்ற அசம்பாவிதங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு, சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.