ஞாநி சங்கரன் மரணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வரை முகநூலில் தனது விமர்சனங்களை முன்வைக்கத் தவறவில்லை. அவரது இறுதிப் பதிவுகள் இங்கே!
ஞாநி சங்கரன், ஒரு பன்முக ஆளுமை! மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். அணு உலை எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் களத்திலும் அவரது பங்களிப்பு இருந்தது.
ஞாநியின் அரசியல் விமர்சனங்கள், படு கூர்மையானவை! பாகுபாடு இல்லாமல் அவரது வார்த்தைகள் ஊழல், சுயநல அரசியல்களை குத்திக் கிழித்திருக்கின்றன. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட ஞாநி, சில மாதங்களாகவே சிகிச்சையில் இருந்தார். இன்று (ஜனவரி 15) அதிகாலையில் அவர் மூச்சுத் திணறலால் இறந்தார்.
ஞாநி மரணமடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை, அதாவது நேற்று இரவு 9.30 மணி வரை தனது முகநூல் பக்கத்தில் விமர்சனங்களை வைத்திருக்கிறார். கடைசியாக நேற்று நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தியின் பேச்சு குறித்து தனது கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஞாநி அது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில், ‘துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ஞாநி இரவு 8 மணிக்கு வெளியிட்ட முகநூல் பதிவில், ‘நாளை இரவு எமது யூடியூப் சேனல் "ஓபக்கங்கள்"பாருங்கள்:
1. வைரமுத்து ஆண்டாள் சர்ச்சை பற்றி ஞாநி
2. சமூகப் போராளி மேதா பட்கருடன் ஓர் உரையாடல்:ஞாநி’ என குறிப்பிட்டிருக்கிறார்.
நேற்று காலை வெளியிட்ட ஒரு பதிவில், ‘மோடி அரசு விடாப்பிடியாக இந்தியை திணித்துக் கொண்டே இருக்கிறது. பி.எஸ்.என்.எல் தொலைபேசிகள் அனைத்திலும் இப்போது ரிங் டோனாக இந்திப் பாடல் ஒலிக்கிறது. பண்பலை வரிசைகளில் பாதிக்குப் பாதி இந்தி விளம்பரங்கள். தமிழக வானொலியில் இந்தி நிகழ்ச்சிகள்’ என கூறியிருக்கிறார்.
இந்தப் பதிவுகள் இட்ட நேரத்திலும்கூட தனது முடிவை அவர் அறிந்திருக்கவில்லை. ஓரளவு நல்ல உடல் நலத்துடன் அவர் இருந்திருப்பதையே இவை காட்டுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.