ஜாக்டோ ஜியோ-கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்: ராமதாஸ்

அதிமுக இணைப்புக்காக பிஸியான முதல்வருக்கு, அரசு ஊழியர் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேசநேரமில்லாதது கேலிக்கூத்து.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என தமிழக அரசு நினைத்தால், மிகமோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியடிகள் அறிவுறுத்திய கோட்பாடு தீயவற்றை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்றால் தமிழகத்தை ஆளும் பினாமி ஆட்சியாளர்களின் கோட்பாடு மக்களின் கோரிக்கைகளை கேட்காதே, பேசாதே, பார்க்காதே என்பது தான் போலிருக்கிறது.

அதனால் தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களின் 4 அம்ச முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், அதுபற்றி பேச்சு நடத்தக்கூட பினாமி அரசு தயாராக இல்லை. இது கண்டிக்கத்தக்கது.

நான்கு கோரிக்கைகள்

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஐம்பதுக்கும் அதிகமான கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், உடனடியாக நிறைவேற்றும்படி அவர்கள் வலியுறுத்துவது நான்கு கோரிக்கைகள் தான். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்; அதுவரை 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; ஒப்பந்த பணி முறையை ஒழித்து விட்டு அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகும்.

இவற்றில் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற முடியாதவை அல்ல. அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது சாத்தியமும் இல்லை. அடுத்த சில மாதங்களில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நெருக்கடி ஏற்படும் என்பது அரசுக்கும் தெரியும்.

அரசு ஊழியர்களின் முதுகில் குத்தியது ஜெயலலிதா அரசு

புதிய ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை, நாடு முழுவதும் இந்த அநீதி நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு காரணம் ஜெயலலிதா அரசு. பழைய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு, புதிய ஓய்வூதிய முறையை 2004-ம் ஆண்டு முதல் பணியில் சேர்பவர்களுக்கு நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி, அதன்பிறகு அரசுப் பணியில் சேரும் அரசு ஊழியர்களின் முதுகில் குத்தியது ஜெயலலிதா அரசு தான். அதன்பின்னர் நடந்த மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக அதிமுக வாக்குறுதியளித்தும் அதைக் காப்பாற்றவில்லை.

வல்லுனர் குழு அமைப்பு

இதைக் கண்டித்தும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரியும் அரசு ஊழியர்கள் மற்றும், ஆசிரியர்கள் கடந்த 20ஜாக்ஜாக்டோ ஜியோ-கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்: ராமதாஸ்டோ ஜியோ-கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்: ராமதாஸ்16-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலின் போது போராட்டம் தொடரக்கூடாது என்று நினைத்த ஜெயலலிதா, புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய முறையை தொடர்வது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

ஏமாற்றி வரும் தமிழக அரசு

அதையேற்று அரசு ஊழியர்களும் போராட்டத்தைக் கைவிட்ட நிலையில் பிப்ரவரி 26-ம் தேதி ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 4 மாதங்களில், அதாவது ஜூன் 24-ம் தேதி அரசிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், ஜூலை மாதம் வரை அக்குழு ஒருமுறை கூட கூடவில்லை. அதன்பிறகு 4 முறை குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை.இப்போது நவம்பருக்குள் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று கூறி அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்

அதேபோல்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2016 முதல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன்படி அவர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் இணைக்கப்பட்டு அதில் 274% புதிய அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத்தொகையும் ஒரே தவணையில் வழங்கப்பட்டு விட்டது.

தமிழகத்தில் நடைமுறை படுத்தப்படவில்லை

ஆனால், தமிழகத்தில் ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறதே தவிர, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படவில்லை. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படாத நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதையும் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. தற்காலிக ஊழியர்களை பணி நிலைப்பு செய்யும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் பயனின்றி போய்விட்டன.

அரசு ஊழியர்களை ஏமாற்றுகிறது

மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேவழியில் தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால், அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே புதிது, புதிதாக பல குழுக்களை தமிழக அரசு அமைத்திருக்கிறது.

போராட்டம் அறிவிப்பு

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 5-ம் தேதி அரசு ஊழியர்கள் சென்னையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 22-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தமும், செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடர்வேலை நிறுத்தமும் மேற்கொள்வதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்தது.

அதிமுக இணைப்பு

அதன்பிறகாவது அவர்களை அழைத்து பேச்சு நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முயன்றிருக்க வேண்டும். ஆனால், அதிமுக இணைப்புக்காக சென்னைக்கும், தில்லிக்கும் பறந்து பறந்து பேச்சு நடத்திய முதலமைச்சருக்கு, அரசு ஊழியர் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச நேரமில்லாதது கேலிக்கூத்து.

கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என தமிழக அரசு நினைத்தால், மிகமோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் மக்களுக்கும், மாணவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, ஜாக்டோ – ஜியோ அமைப்பின் நிர்வாகிகளைம் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளையும், செப்டம்பர் 7 முதல் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளவிருக்கும் போராட்டங்களை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close