பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த ஆண்டிற்குள் அத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டிருக்கிறார். தமிழக உழவர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலான இந்த அறிவுறுத்தல் கண்டிக்கத்தக்கதாகும்.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற இது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி, ‘‘கெயில் எரிவாயுக்குழாய்ப் பாதைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குழாய் பதிக்கும் இடங்களுக்கு விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று காட்டி, இத்திட்டத்தால் விவசாயம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு, கெயில் நிறுவனம், பெட்ரோலிய அமைச்சகம் ஆகியவை செய்ய வேண்டும்’’ என கூறியிருக்கிறார். பிரதமரின் கருத்து அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயுக் குழாய்ப் பாதை குறித்து உழவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற எண்ணத்தில் பிரதமர் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். மேலும் இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப் படாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அது உண்மையல்ல. எரிவாயுக் குழாய்ப் பாதை அமைக்கப்பட்டால் விவசாயத்துக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை தமிழக உழவர்கள் நன்றாக அறிந்துள்ளனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். பயிர்களின் விளைச்சல் குறைவது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 27.06.2014 அன்று இதே கெயில் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எரிவாயுக் குழாய் வெடித்தால் 18 பேர் உயிரிழந்ததுடன், பெருமளவில் சேதம் ஏற்பட்டதையும் அவர்கள் அறிவர்.
அதனால் தான் கடந்த 2013-ஆம் ஆண்டு தங்களின் எதிர்ப்பையும் மீறி எரிவாயுக் குழாய்ப் பாதைகள் அமைக்க கெயில் நிறுவனமும், தமிழக அரசும் முயன்ற போது, குழாய் பதிக்கும் இராட்சத எந்திரங்கள் முன்பு அமர்ந்து இத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். தமிழக காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போதிலும் விவசாயிகள் அவர்களின் போராட்டத்தைக் கைவிடவில்லை. உழவர்களின் இந்த மன உறுதியைக் கண்டு பயந்து தான், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையை கைவிட்டு உழவர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்தார். அதனால் தான் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.
இவ்வளவு இடர்களையும், ஒடுக்குமுறைகளையும் கடந்து வந்த தமிழக உழவர்களிடம், இத்திட்டத்தால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று பிரதமர் நம்புவது குழந்தைத்தனமானது. கெயில் எரிவாயுக் குழாய் பாதைத் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தி விட வேண்டும் என்றும் துடிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இப்பிரச்சினையை உழவர்களின் கோணத்திலிருந்து பார்க்கத் தவறியது ஏன்? என்பது தான் தெரியவில்லை. இத்திட்டத்திற்காக 5,842 விவசாயிகளுக்கு சொந்தமான 1,491 ஏக்கர் நிலத்தை கெயில் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஏக்கருக்கு ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் நிலங்களுக்கு ரூ.3 லட்சம் வரையே இழப்பீடு வழங்கப்படும் என்று கெயில் அறிவித்திருக்கிறது. இது உழவர்களுக்கு எந்த வகையில் போதுமானதாக இருக்கும் என்பதையோ, இதுகுறித்து உழவர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் விருப்பங்களை அறிந்து தீர்வு காணலாம் என்பதையோ பிரதமர் மோடி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்பதிலிருந்து அவர் எந்த அளவுக்கு கார்ப்பரேட்வாதியாக மாறியிருக்கிறார் என்பதை உணரலாம்.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மங்களூருக்கு எரிவாயு எடுத்துச் செல்வதற்கான இந்தப் பாதை கேரளத்தில் நெடுஞ்சாலையோரங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் இப்பாதையை அமைக்கலாம் அல்லது வேளாண் விளைநிலங்கள் இல்லாத மாற்றுப்பாதையில் அமைக்கலாம். இந்த வாய்ப்புகள் குறித்தெல்லாம் சிந்தித்துக் கூடப் பார்க்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முனைவதை தமிழகத்திலுள்ள விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் ஒருபோதும் ஏற்காது.
மத்திய அரசு காலால் இட்ட உத்தரவுகளை தலையால் செய்து கொண்டிருக்கும் பினாமி எடப்பாடி அரசு, விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளிவிட்டு, அடக்குமுறையின் உதவியுடன் இந்த்திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என்று நினைத்தால் மக்களின் புதிய புரட்சியையும், எழுச்சியையும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, இத்திட்டத்தை அதன் இப்போதைய வடிவில் செயல்படுத்துவதை விடுத்து உழவைப் பாதிக்காமல் மாற்று வழியில் செயல்படுத்தும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.