தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், காவல்துறை ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு அமைச்சர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதன்பின்னர், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆளுநரை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பது வரம்பு மீறிய செயலாகும்.
அரசு விழாக்களில், பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர்கள் பங்கெடுப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் கோவை மாவட்டத்தில், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது, வரம்பு மீறிய செயலாகும். பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுவதாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது: தன்மானமோ, சுயகவுரவமோ அற்றது போல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பதை நிரூபணம் செய்யும் வகையில், ஆளுநரின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழக அரசின் முதல்வராக, ஆளுநர் தான் செயல்படுவதாக தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.