ஆளுனர் பதவியேற்பில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. உயர் அதிகாரியிடம் கோபமாக அவர் முறையிட்டார்.
தமிழக புதிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், இன்று (அக்டோபர் 6) பதவியேற்றார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகையான ராஜ் பவனில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கவர்னர் பதவியேற்பு முடிந்ததும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கைலுக்கி கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்தும் பூச்செண்டு கொடுத்தும் வாழ்த்தினார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் வரிசையாக வந்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பூச்செண்டு வழங்கினர். அதிமுக-வை சேர்ந்தவரான அரசு கொறடா தாமரை ராஜேந்திரனும் வரிசையில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர்கள் வாழ்த்தி முடித்ததும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒவ்வொருவராக கவர்னருக்கு அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தத் தருணத்தில் முன் வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து மேடைக்கு வர தயாராக நின்றார். ஆனால் அவரை அதிகாரிகள் யாரும் மேடைக்கு அழைக்கவில்லை.
இதனால் கோபமான ஸ்டாலின் ஆளுனரின் முதன்மை செயலாளரான ரமேஷ் சந்த் மீனா ஐ.ஏ.எஸ்.ஸை அழைத்து, ‘என்னை எப்போது மேடைக்கு அனுமதிப்பீர்கள்?’ என கோபமாக கேட்டார். அதற்கு அவர் ஏதோ சமாதானம் கூறினார். ஆனால் கோபம் குறையாமல் ஸ்டாலின் காணப்பட்டார். அவருடன் வந்திருந்த எ.வ.வேலு, பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் ஆகியோரும் அதிகாரிகளிடம் குறைபட்டுக் கொண்டனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வாழ்த்துக்கு பிறகு தன்னுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள் சகிதமாக மேடைக்கு சென்றார் ஸ்டாலின். சற்று இறுகிய முகத்துடனேயே ஆளுனருக்கு மலர் கொத்து வழங்கி வாழ்த்து கூறிவிட்டு வந்தார் அவர். தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்களும் கவர்னருக்கு வாழ்த்து கூறினர்.
இது தொடர்பாக இன்று பிற்பகலில் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘அமைச்சர்கள் வாழ்த்து கூறி முடித்ததும், புரொட்டகால் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்களுக்கு பிறகு அரசு கொறடாவை அழைத்தார்கள். அதன்பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வாழ்த்து கூறினர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை முன்கூட்டியே அனுமதிப்பதாக இருந்தால், அமைச்சர்களுக்கு முன்பே அனுமதித்திருக்கலாம். அமைச்சர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து! ஒரு அதிகாரியிடம் இதை நான் குறிப்பிட்ட பிறகும், உங்களை இப்போது அழைக்க முடியாது என கூறிவிட்டார்’ என்றார் ஸ்டாலின்.
இந்த விவகாரம் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.