தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள பன்வாரிலால் புரோகித் சென்னை வருவதையொட்டி, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று விடைபெற்றார். முன்னதாக தமிழக ஆளுநராக இருந்த ரோசையாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து தமிழக அரசியலில் குழப்பம் ஏற்பட்டன. அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை, பின்னர் ஜெயலலிதா மரணம். அடுத்து அதிமுக பிளவு என பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநர் மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 30-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெற்றார். மகாராஷ்டிரா ஆளுநராகவும், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் வித்யாசாகர் ராவ் இருந்து வந்த நிலையில், இனி மகாராஷ்டிரா ஆளுநராக மட்டும் செயல்படவுள்ளார். இன்று காலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாரகர் ராவை, சென்னை விமான நிலையத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழியனுப்பி வைத்தார்.
புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள பன்வாரிலால் புரோகித் இன்று மதியம் சென்னை வருகிறார். பன்வாரிலால் புரோகித் நாளை(வெள்ளிக்கிழமை) பதவி ஏற்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் இந்த விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்க உள்ள பன்வாரிலால் புரோகித் மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா பகுதியை சேர்ந்தவர். அவருக்கு 77 வயது. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்ற பதவிகள் வகித்த அனுபவம் பன்வாரிலால் புரோகித்துக்கு உண்டு. ‘தி ஹிதாவதா’ என்ற நாளிதழின் உரிமையாளர் மற்றும் நிர்வாக ஆசிரியராக பன்வாரிலால் புரோகித் இருந்து வரும் நிலையில், நாக்பூரில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.