செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது பாஜகவைப் போல் ஆளுநர் செயல்படுவதை காட்டுகிறது என்று முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒன்றிய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் கூறினார்.
ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது : “ தமிழ்நாடு மக்களின் நலனுடன் ஆளுநர் விளையாடுகிறார். ஆளுநர் தேவை இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால், தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தேவையற்றது. தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆளுநர் விமர்சனம் செய்து வருகிறார். தமிழகத்தில் முதலீடு செய்யவிடாமல் தடுக்கவே வெளிநாடு செல்வதால் முதலீடு வராது என அவர் கூறுகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, பாஜகவை போல் அவர் செயல்படுவதையே காட்டுகிறது. அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியுள்ளதால், தனது முடிவு சரியானது.
மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது என செயல்படுகிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. பாஜகவினர் மீதும் வழக்குகள் இருக்கின்றன.
அமலாக்கத்துறை நடவடிக்கையால் பாஜக மீதான தனது நிலைபாட்டை திமுக மாற்றிக் கொள்ளாது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம், திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுகிறது. பாஜகவுக்கு எதிராக தேசிய முன்னணியை உருவாக்க முயற்சித்தால், இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“