தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் களம் நாள்தோறும் பரபரப்பாகவே உள்ளது. தினமும் ஏதேனும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டோ அல்லது அதிரடி நடவடிக்கைகளை எடுத்தோ தமிழக அரசியல்வாதிகளும் பரபரப்புக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
அந்த வகையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக-வில் அரங்கேறும் சம்பவங்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிகார மோதல் காரணமாக பிரிந்த இரு அணிகள் நேற்று ஒன்றிணைந்தன. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை தவிர்த்து அதிமுக-வை பேச முடியாது என்ற சூழலில், அவர்களது குடும்பம் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
ஆனால், "எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமே தங்களுக்கு நம்பிக்கை இல்லை" என கூறும் அவர்களது கடிதத்தில் "அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என எந்த இடத்திலும் கூறப்படவில்லை"
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என எம்எல்ஏ-க்கள் கூறியிருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஊழலை ஒழிப்பேன் என்ற மோடி ஊழலின் உறைவிடமாக உள்ள அணிகளை ஒன்றாக்கி உள்ளார். எம்எல்ஏ-க்கள் 22 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. எம்எல்ஏ-க்கள் முதல்வர் மீதான ஆதரவுக்கு வாபஸ் கடிதம் தந்துள்ள சூழ்நிலையில், சட்டப் பேரவையை உடனே கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்றார்.
சட்டப்பேரவையை கூட்ட நீங்கள் வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், நியாயமாக ஆளுநரே சட்டப்பேரவையை கூட்டுவதற்கு உத்தரவிட வேண்டும். அப்படி உத்தரவிடாத பட்சத்தில் நீங்கள் கேட்ட கேள்வி பரிசீலிக்கப்படும் என்றார்.
அதேசமயம், தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் திமுக பரிசீலித்து முடிவு எடுக்கும் நல்ல முடிவை எடுக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.