கடந்த சனிக்கிழமை அன்று சென்னை திரும்பிய ஆளுநர் வித்யாசாகர் ராவை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, எம்.எல்.ஏ. சரவணன் பேரம் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து ஆளுநரிடம் அவர் முறையிட்டார். இதையடுத்து, அந்த குறிப்பிட்ட வீடியோ ஆதாரத்தையும் ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்த ஸ்டாலின், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதனுடன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையையும், சி.டி.யையும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கும், தலைமை செயலாளருக்கும் அனுப்பி வைத்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.