scorecardresearch

இன்று மதியம் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை : அடுத்த நடவடிக்கை என்ன?

கவர்னர் வித்யாசாகர் ராவ், செவ்வாய்கிழமை மதியம் சென்னை திரும்புகிறார். ஜனாதிபதியுடன் அவர் ஆலோசித்தது குறித்தும் தகவல் கசிந்திருக்கிறது.

governor vidyasagar rao, president ramnath govind, minister rajnathsingh, aiadmk, ttv.dhinakaran faction 18 mla's disqualified, speaker dhanapal, cm edappadi palaniswami

கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று (செவ்வாய்கிழமை) மதியம் சென்னை திரும்புகிறார். ஜனாதிபதியுடன் அவர் ஆலோசித்தது குறித்தும் தகவல் கசிந்திருக்கிறது.

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது. தமிழக எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக இந்த நடவடிக்கையை கண்டித்திருக்கின்றன.

ஆகஸ்ட் 17-ம் தேதியே டிடிவி.தினகரன் அணியின் எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோதும், கவர்னர் அதை ஏற்கவில்லை. அதனால்தான் ஜனநாயக படுகொலை என்று சொல்லத்தக்க இந்த நடவடிக்கையை சபாநாயகர் எடுக்கத் துணிந்ததாக விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.

தற்போது விமர்சன அம்புகள் இந்த விஷயத்தில் கவர்னரையும் துளைக்கின்றன. செப்டம்பர் 18-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வரவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் பயணத்தை கவர்னர் தவிர்த்தார். அதன்பிறகே 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் நேற்று (18-ம் தேதி) மதியம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக அவர் விவாதித்தார். தொடர்ந்து மாலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் கவர்னர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பலமான விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை. எனவே இங்கு 356-வது சட்டப்படி ஆட்சியை கலைக்கும் கேள்வியே எழவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத அளவுக்கு உள்கட்சி நெருக்கடி ஏற்பட்டிருப்பது குறித்தே ஜனாதிபதியுடன் கவர்னர் ஆலோசித்ததாக தெரிகிறது.

உட்கட்சி பிரச்னையால் ஆட்சி கவிழ்வதை மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்படுகிறது. தவிர, இப்போது ஆட்சி கவிழ்ந்து, திமுக.வுக்கு சாதகமான சூழல் உருவாவதையும் டெல்லி விரும்பவில்லை. எனவே அதிமுக உள்கட்சி குழப்பம் ஓய்வதற்கு அவகாசம் கொடுக்கும் வகையில் 6 மாதங்களுக்கு மட்டும் சட்டமன்றத்தை முடக்கி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்களில் பரபரப்பாக தகவல்கள் உலவுகின்றன. ஜனாதிபதியுடன் கவர்னர் நடத்திய சந்திப்பில் இது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இன்னொரு தரப்பினரோ, வருகிற 21-ம் தேதியே எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயாராகிவிட்டதாக கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 215 ஆகிறது. எனவே மெஜாரிட்டியை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ.க்கள் போதுமானது. தற்போது எடப்பாடி அணிக்கு 115 எம்.எல்.ஏ.க்கள் வரை ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், சுலபமாக அரசு ஜெயிக்கும்.

இதற்கு ஏற்ப உத்தரவுகளை பிறப்பிக்கும் திட்டத்துடனேயே கவர்னர் செப்டம்பர் 19-ம் தேதி சென்னைக்கு வரவிருப்பதாக தமிழக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன. திங்கட்கிழமை மாலையில் தமிழக சட்டமன்றத்தில் ‘மைக்’களை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் சிலர் ஈடுபட்டனர். அதி விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதற்கான அறிகுறியாகவும் இதை தலைமைச் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இந்தத் திட்டங்கள் எல்லாமே அடுத்த ஓரிரு தினங்களில் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைப் பொறுத்து திசை மாறவும் வாய்ப்பிருக்கிறது. எடப்பாடி அரசு நீடிக்குமா? டிடிவி கனவு பலிக்குமா? என்பவைதான் விவாதிக்கப்படும் முக்கியமான கேள்விகள்! முன்பு எப்போதும் இல்லாத ‘சஸ்பென்ஸ்’ கட்டத்தில் இருக்கிறது தமிழக ஆட்சி நிலவரம்!

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Governor vidyasagar rao shall come on tuesday noon what discussion took place on the meeting with president