பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக 45 கிராமங்கள் அறிவிப்பு: அழிவின் விளிம்பில் கிராமங்கள்

“உலக நாடுகள் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், நேர்மாறாக தமிழக அரசு செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும்”.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு எதிராக நூறு நாட்களைத் தாண்டி மக்கள் போராட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேறவும், எண்ணெய் கிணறுகளை அப்புறப்படுத்தவும் வலியுறுத்தி போராட்டம், டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம். இந்த போராட்டங்களெல்லாம் பார்ப்பதற்கு வேண்டுமானால் வெவ்வேறு கோரிக்கைகளுக்காக மக்கள் போராடுவதாக தோணலாம். ஆனால், அவர்களுக்கெல்லாம் ஒரே கோரிக்கைதான். அது அவர்களுடைய வாழ்வாதாரமும், தங்கள் கிராமங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது. இவர்கள் அனைவரும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். அது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது.

ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு எதிராக தமிழக அரசு கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில், 23,000 ஹெக்டேர் நிலத்தை பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலமாக (பி.சி.பி.ஐ.ஆர்.) அறிவித்துள்ளது. இதில், 25 குக்கிராமங்கள் கடலூர் மாவட்டம் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டங்களிலும்,
நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களிலும் அமைந்துள்ளன. தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேசம், ஒடிஷா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அறிவிக்கப்படுவதன் மூலம், அந்த கிராமங்களில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைத்து, எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், அப்பகுதிகளில் 92,160 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த 19-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசின்போதே பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியதும், 2015-ஆம் ஆண்டில் அதற்கான கிராமங்கள் முஎடிவெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அப்போதே கடலூர், நாகை மாவட்டங்களில் 22,160 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் உறுதிபடுத்தப்பட்டதாக, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

இந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களில், எவ்வித எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் அல்லது ஆய்வுகள் மேற்கொள்ளப்படாது எனவும், பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் எனவும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

ஆனால், இந்த அறிவிப்பால் கடலூர், நாகை மாவட்டங்கள் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன். “உலக நாடுகள் பல பெட்ரோலிய பயன்பாட்டைத் தவிர்த்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றிற்கெல்லாம் நேர்மாறாக தமிழக அரசு செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியிலும் பேரிடர்களை ஏற்படுத்தும். பெட்ரோலிய சுத்திகரிப்பு என்பது சுற்றுச்சூழலை பெருமளவில் பாதிக்கும், முக்கியமாக கடலோரா கிராமங்களில்.”, என கூறுகிறார் சுந்தர்ராஜன்.

இதுகுறித்து பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், “பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிக்கப்படுவதன் மூலம், பெட்ரோலியம் சார்ந்து முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். ஏற்கனவே, தொழிலாளர் சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மீறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் நிறுவனங்களுக்காக நிச்சயம் தொழிலாளர் நலச்சட்டங்களிலும், நிலம் கையகப்படுத்துதலிலும் விதிகள் தளர்த்தப்படும்.”, என நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த அறிவிப்பு இருக்கும் என்பதை தெரிவித்தார் வெற்றிச்செல்வன்.

வறட்சி, சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்கள் என பலவகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்விடத்தையும் பாதிக்கக்கூடிய இந்த அறிவிப்பை தமிழக அரசு மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

×Close
×Close