/indian-express-tamil/media/media_files/2025/10/02/grama-sabha-2025-10-02-12-44-30.jpg)
புகைப்படம்: எக்ஸ்
தமிழகத்தில் சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் வகையில், கிராமசபை கூட்டங்களில் முக்கிய தீர்மானமாக சாதிப் பெயர்கள் கொண்ட தெருக்கள், சாலைகள் மற்றும் குக்கிராமங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று (அக்டோபர் 2) நடைபெறவிருந்த கிராமசபை கூட்டமானது, பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, அக்டோபர் 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் சார்பில் 14 கருப்பொருள்கள் அடங்கிய அஜெண்டா வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமூக நீதி சார்ந்த முக்கிய தீர்மானம் இடம்பெற்றுள்ளது, இது மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக நீதிக்காக சாதிப் பெயர்களை நீக்கும் முயற்சி
வெளியிடப்பட்டுள்ள கூட்டப்பொருட்களில், இரண்டாவது கருப்பொருளாக, "சாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல்" எனும் தலைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
அரசு எடுத்த முடிவு:
சமத்துவம், சமூக நீதி மற்றும் சுயமரியாதை அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள சில குடியிருப்புகள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்கள் இன்னும் சாதிப் பெயர்களைக் கொண்டிருப்பதால், அவற்றை நீக்கிவிட்டு சமூக நீதியை நிலைநாட்ட அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த விவாதத்தின் போது, பொதுமக்கள் உரிய ஆலோசனைகளையும், பதிவுகளையும் கிராம சபையில் வழங்கலாம். இந்த ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் குடியிருப்பு, சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மாற்றி அரசு ஆணை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய கூட்டப்பொருட்கள் என்னென்ன?
அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களில், சாதிப் பெயர்களை நீக்கும் தீர்மானத்துடன் சேர்த்து மேலும் பல முக்கிய நிர்வாக மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன:
கிராம மக்களின் தேவைகள்: கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளில் குறைந்தது ஏழு பணிகளைக் கேட்டறிந்து, அதில் மிக முக்கியமான மூன்று பணிகளைத் தேர்வு செய்து கிராம சபையின் ஒப்புதல் பெறுதல்.
ஊராட்சி செலவின அறிக்கை: 2025 ஏப்ரல் 1 முதல் 2025 செப்டம்பர் 30 வரையிலான காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை குறித்து படித்து, ஒப்புதல் பெறுதல்.
மழைக்கால முன்னெச்சரிக்கை: கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளைக் கண்டறிதல் மற்றும் நீர் தடையின்றி செல்ல வழிவகை செய்வது குறித்து விவாதித்தல்.
சபாசார் செயலி: கிராமசபை கூட்டங்களின் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை அரசு அங்கீகரித்துள்ள 'சபாசார்' (Sabasar) செயலி மூலம் பதிவேற்றம் செய்வது குறித்து விவாதித்து, அதற்கான இலக்கை நிர்ணயிப்பது.
தமிழக கிராம மக்கள் அனைவரும் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, சாதிப் பெயர்கள் நீக்கும் தீர்மானம் உள்ளிட்ட அரசின் முடிவுகள் குறித்து விவாதித்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.