‘மெர்சல்’ படத்தில் இருந்து மத்திய அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக, தயாரிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார்.
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்து தயாரித்துள்ளது.
‘மெர்சல்’ படத்தில் மக்களைப் பாடாய்படுத்திய பல சமூக விஷயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘8 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு மருத்துவத்தை இலவசமாக அளிக்கும்போது, 28 சதவீதம் வசூலிக்கும் இந்தியா ஏன் மருத்துவத்தை இலவசமாகத் தரவில்லை?’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ, திருநாவுக்கரசர் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இயக்குநர் பா.இரஞ்சித்தும், ‘இந்தக் காட்சிகளை நீக்கத் தேவையில்லை. மக்களிடம் இந்தக் கருத்துகளுக்கு வரவேற்பு உள்ளது’ என்று கூறினார். ஆனாலும், ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளரான முரளி ராமசாமி முடிவு செய்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் போன் மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் முரளி.
ஏற்கெனவே விலங்குகள் நல வாரியம் கிட்டத்தட்ட 15 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னதையடுத்து, இந்தக் காட்சிகளும் நீக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் பரபரப்பான இந்தப் பிரச்னையில் பாஜக-வுக்கு விஜய் பணிந்ததாக விமர்சனங்கள் எழுகின்றன.