ஜிஎஸ்டி வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் உணவு விடுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறைக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால், உணவு விடுதிகளின் வரிச்சுமை உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து கடந்த மே மாதத்தில், தமிழகம் முழுவதும் ஹோட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்யும் சிறிய உணவகங்களுக்கு 0.5 சதவீதம் வாட் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஜிஎஸ்டியால் இந்த உணவகங்களின் வரிச்சுமை 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் சாதாரண உணவகங்களுக்கு 2 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்தது. இதற்கு தற்போது 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக விற்பனை நடைபெறும் குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்களுக்கு மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி 2 சதவீதம், சேவை வரி 6 சதவீதம் என 8 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இதற்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/Hotels2.jpg)
இந்த கூடுதல் வரிச்சுமையை உணவகங்கள் பொதுமக்களின் மீது திணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உணவு விலைகளின் ஏற்றத்தால் தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், முந்தைய வரிவிதிப்பு முறையையும், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையையும் ஒப்பிட்டு ஹோட்டல்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பொதுமக்களை பாதிக்கும் வரிவிதிப்பு முறையை மறு பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு அதில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.