ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் பொருட்களின் விலையேற்றம் குறித்த அச்சம் மக்களிடம் நிலவி வந்த நிலையிலும், சென்னை தி,நகரில் வழக்கம் போலவே மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து சென்னை வந்தவர்கள் என அனைவரும் துணி எடுக்கவும், இன்னும் பல பொருட்கள் வாங்கவும் தி.நகரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். தி.நகர் சென்றால் வளையல் முதல் வைரம் வரை வாங்கி வரலாம் என சொல்வார்கள். அதற்கு ஏற்றாற்போல் தி.நகரில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். எனவே, தி.நகரில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும். அதுவும், விடுமுறை, பண்டிகை காலகட்டங்களில் மக்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும்.
தி.நகரில் எப்போதும் மக்கள் கூட்டம் பெருகி வழிவதால், பெரிய கடைக்காரர்கள் மட்டுமல்லாமல் சிறு வணிகர்கள், சாலையோர கடைகள், சிறிய உணவகங்கள், சில்லறை வியாபாரிகள் என பல தரப்பட்ட வணிகர்களுக்கும் வியாபார சொர்க்கபுரியாகவே தி.நகர் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒற்றை வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இதற்கான அறிமுக விழா கோலாகலமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. சனிக்கிழமை முதல் இந்த வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் விடுமுறை தினம் என்பதால், இந்த தினங்களில் தி.நகர் உள்ளிட்ட அங்காடித் தெருக்களில் பொதுமக்கள் ஏராளமாக கூடுவர். ஆனால், ஜிஎஸ்டி மூலம் அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுவதால், பொருட்களின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்த முழுமையான புரிதல் வணிகர்களுக்கே இன்னமும் இல்லாத நிலையில், சாமானியர்களுக்கு கண்டிப்பாக இருக்க வாய்ப்பில்லை. அதிலும், கடந்த சில மாதங்களாகவே ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என ஊடகங்களும் பெரிது படுத்தியதால், விலை ஏற்றம் குறித்த அச்சமே பொதுமக்களிடம் பெரிதும் காணப்பட்டது.
இத்தகைய சூழலில், விடுமுறை தினத்தில் ஜிஎஸ்டி அமலானதால், தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பல்வேறு அங்காடித் தெருக்களில் வியாபாரம் கணிசமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மக்கள் கூட்டம் அங்கு அலை மோதியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் பல்வேறு உணவகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.