Advertisment

துரைமுருகனை கொந்தளிக்க வைத்த ஆடியோ... குடியாத்தம் குமரன் நீக்கப் பின்னணி

ஸ்டாலின் விசுவாசிகளாக தங்களை வெளிப்படுத்தி வருபவர்கள் இதேபோல பலிகடா ஆக்கப்படும் கொடுமை நடப்பதையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
gudiyatham kumaran suspended from dmk, gudiyatham kumaran against duraimurugan, குடியாத்தம் குமரன், குடியாத்தம் குமரன் திமுக நீக்கம், துரைமுருகன்

gudiyatham kumaran suspended from dmk, gudiyatham kumaran against duraimurugan, குடியாத்தம் குமரன், குடியாத்தம் குமரன் திமுக நீக்கம், துரைமுருகன்

குடியாத்தம் குமரன், திமுக.வின் முன்னணி பேச்சாளர்! திமுக.வின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும்கூட! திடுதிப்பென அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவதாக திமுக அறிவித்திருப்பது, அந்தக் கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

திமுக மேடைகளில் காரசாரமாக முழங்கக்கூடிய ஒரு பேச்சாளர், குடியாத்தம் குமரன். கட்சியின் அடுத்த வெற்றி கொண்டானாக இவரை குறிப்பிடுவார்கள். 16 வயது சிறுவனாக கட்சிக்குள் சேர்ந்து, சுமார் 30 ஆண்டுகள் கட்சிப்பணிக்கு பிறகு கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் என்கிற நிலைக்கு உயர்ந்தவர். கடந்த 25-ம் தேதி இவரை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்டம் கட்டியிருக்கிறது முரசொலி.

சுமார் ஓராண்டுக்கு முந்தைய ஒரு பழைய ஆடியோ இப்போது அவரது பதவியை பறித்திருக்கிறது என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள். அதாவது, துரைமுருகன் திமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதையொட்டி அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்துவது தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நடந்தது. அதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக்கழக நிர்வாகி என்ற முறையில் குடியாத்தம் குமரன் பேசுவதற்காக ‘மைக்’ முன்பு சென்றாராம். அங்கிருந்த துரைமுருகன் தலையிட்டு, அவரை பேச அனுமதிக்காமல் உட்கார வைத்ததாக கூறப்படுகிறது.

gudiyatham kumaran suspended from dmk, gudiyatham kumaran against duraimurugan, குடியாத்தம் குமரன், குடியாத்தம் குமரன் திமுக நீக்கம், துரைமுருகன்

அன்று மாலை யாரோ ஒருவர் இதை குறிப்பிட்டு போனில் குடியாத்தம் குமரனிடம் கேட்டதாகவும், அப்போது துரைமுருகன் குறித்து குமரன் பேசியவைதான் அந்த ஆடியோவில் இருந்ததாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதாவது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக துரைமுருகன் தரப்பு செயல்பட்டதாக அந்த ஆடியோவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதாம். தவிர, ‘கட்சியின் தலைவர் தளபதி, வருங்காலம் உதயநிதிதான். வேறு யாரும் முக்கியம் அல்ல’ என்கிற ரீதியிலும் ஆடியோ இருந்ததாம்.

மிக தாமதமாக இந்த ஆடியோ வைரல் ஆனது. இது துரைமுருகனை உசுப்பேற்றிவிடவே, அறிவாலயத்தில் இருந்து குமரனுக்கு சம்மன் வந்தது. கடந்த 24-ம் தேதி அறிவாலயத்தில் ஆஜராகி, ‘அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல’ என ஆர்.எஸ்.பாரதியிடம் விளக்கம் கொடுத்தார் குமரன். அவரும் அதை எழுதிக் கொடுத்துவிட்டு செல்லும்படி கூற, அப்படியே செய்திருக்கிறார்.

அறிவாலய வாசலுக்கு வந்து நின்று குடும்பத்தினருக்கு போன் போட்டு, இங்கு நடந்தவற்றை அப்படியே கூறியிருக்கிறார் குமரன். எதிர் முனையில் இருந்தவர்கள், ‘உன்னை கட்சியை விட்டு நீக்கிட்டாங்க. டி.வி.யில் செய்தி ஓடுது’ என கூற, அதிர்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பி வந்திருக்கிறார் குமரன்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிற அடிப்படையில் துரைமுருகனின் அதிதீவிர ஆதரவாளராக இயங்கி வந்தவர்தான் குமரன். அண்மை நாட்களாக வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமாருடன் தன்னை நெருக்கமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார். தவிர, வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வெற்றிபெற்ற பிறகு வெளியிடப்பட்ட நன்றி அறிவிப்பு நோட்டீஸ்களில் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு முக்கியத்துவம் இல்லை என இவர் பேசி வந்ததாகவும் கூறுகிறார்கள்.

அறிவாலயத்திற்கு இது புகாராகப் போனதும், ‘மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்புவோம்’ என தலைமைக் கழக நிர்வாகிகள் கருத்து கூறினார்களாம். ஆனால் துரைமுருகன் தரப்பிலோ, ‘குமரனை நீக்காவிட்டால், பொருளாளர் அறிவாலயம் வருவதையே நிறுத்திவிடும் மனநிலையில் இருக்கிறார்’ என கூறப்பட்டிருக்கிறது. அந்த நிர்ப்பந்தம் அடிப்படையிலேயே குமரனை நீக்க மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்ததாக கூறுகிறார்கள்.

இது குறித்துப் பேசும் நிர்வாகிகள் சிலர், ‘குமரன் பொது இடத்திலோ, பொதுக்கூட்டத்திலோ கட்சிக்கு விரோதமாக எதையும் பேசவில்லை. தன்னிடம் தனிப்பட்ட முறையில் போனில் பேசிய ஒருவரிடம் அவர் மீதான நம்பிக்கை அடிப்படையில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கலாம். இது தப்பென்றால், துரைமுருகன் உள்பட எந்த நிர்வாகியும் கட்சியில் உறுப்பினராக நீடித்திருக்க முடியாது. அதுவும், ஜோவியலாக கமெண்ட் அடிப்பதில் கில்லாடியான துரைமுருகன், கட்சி நிர்வாகி ஒருவரை தனிப்பட்ட காரணத்திற்காக பதவி நீக்கம் செய்ய வைத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்கிறார்கள்.

அவர்களே தொடர்ந்து, ‘திமுக பொதுக்கூட்டங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கோவை, திருவள்ளூர் உள்பட 6 ஊர்களின் நீதிமன்றங்களில் குமரன் மீது வழக்குகள் இருக்கின்றன. தனியாக வக்கீல் வைத்து வாதாடும் நிலையில் குமரன் வசதியாகவும் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் குமரன் ஆஜராக வேண்டியிருக்கிறது. கட்சி வழக்கறிஞர்கள் அவருக்கு ஆஜராவார்களா? என்பதும் தெரியவில்லை’ என்கிறார்கள், வருத்தத்துடன்!

திமுக.வில் அதிதீவிர ஸ்டாலின் விசுவாசிகளாக தங்களை வெளிப்படுத்தி வருபவர்கள் இதேபோல பலிகடா ஆக்கப்படும் கொடுமை நடப்பதையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். திமுக.வின் தலைமை நிலைய செயலாளராக இருந்த கல்யாணசுந்தரம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் புகாரில் சிக்கியவர்களை கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என கருத்து கூறினார். ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், கனிமொழி மற்றும் தயாநிதிக்கு எதிராகவும் அவரது கருத்து பார்க்கப்பட்டது. அப்போது கருணாநிதியால் நடவடிக்கைக்கு உள்ளான கல்யாணசுந்தரம், இன்னும் கட்சிக்குள் திரும்ப முடியவில்லை.

அதேபோல கருணாநிதி இருந்தபோதே பல ஆண்டுகளாக மேடைகளில், ‘தலைவர் தளபதி’ என முழங்கி வருபவர் குமரன். ஒரு டி.வி. விவாத நிகழ்ச்சியில், ‘தளபதிக்காக தீக்குளிக்கவும் நான் தயார்’ என பேசி, பரபரப்பை ஏற்படுத்தியவர்! அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாமல், சிறு வயதில் இருந்து இதிலேயே உழன்று, இதிலேயே வளர்ந்த ஒருவர், திடுதிப்பென ஒருநாள் தூக்கி எறியப்படும்போது ஏற்படும் வேதனை கொடுமையானதுதான்.

 

Mk Stalin Dmk Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment