Advertisment

கிண்டி சிறுவர் பூங்கா ரவுண்டப்: விலங்குகளுக்கு புதிதாக 6 சிகிச்சை மையங்கள்

"கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிரியல் பூங்காவின் வருவாய் முற்றிலுமாக முடிவடைந்தபின், நாங்கள் எங்கள் சொந்த வளங்களைச் செலவழித்தோம்" என்று இ. பிரசாந்த் கூறுகிறார்.

author-image
Janani Nagarajan
May 30, 2022 19:00 IST
New Update
கிண்டி சிறுவர் பூங்கா ரவுண்டப்: விலங்குகளுக்கு புதிதாக 6 சிகிச்சை மையங்கள்

கிண்டி தேசிய சிறுவர் பூங்கா

கிண்டி தேசிய சிறுவர் பூங்காவில், காயப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை புதுப்பித்து உள்ளனர். பூங்காவில் செயல்பாட்டில் இருந்த நான்கு சிகிச்சை மையங்களுடன், ஆறு புதிய சிகிச்சை மையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதைப்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், கிண்டி தேசிய பூங்காவின் வார்டன் இ.பிரசாந்திடம் பேசியபோது: 

"சென்னை நகரின் மையத்தில் இந்த பூங்கா அமைந்துள்ளதால், நான்கு சிகிச்சை மையங்கள் வைத்திருப்பது கடினமாக இருந்தது. விலங்குகளுக்கு பெரிய காயம் ஏற்பட்டால், அவைகளை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கோ அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கோ அனுப்புவது வழக்கம்; இதில் போக்குவரத்து நெரிசலில் காரணமாக சிகிச்சை தாமதம் ஆகும் அபாயம் ஏற்பட்டது. அதனால் முடிந்தவரை கிண்டி தேசிய பூங்காவில் அத்தியாவசிய வசதிகளை செய்யவேண்டும் என்று நினைத்தோம்.

தற்போது நான்கு மையங்களிலிருந்து பத்து மையங்களாக புதுப்பித்துள்ளோம்; புதிதாக இரண்டு பெரிய சிகிச்சை மையங்கள் மற்றும் நான்கு சிறிய மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதனால் விலங்குகள் பராமரிக்க அதிக இடம் கிடைத்துள்ளது. 

விலங்குகளின் பிரேத பரிசோதனைக்காக, கிண்டி தேசிய பூங்காவில் மட்டுமல்லாமல் சென்னையைச் சுற்றி இருக்கும் எல்லா விலங்குகளையும் பரிசோதிக்கும் வண்ணம் நன்கு விசாலமான மற்றும் சுகாதாரமான முறையில் இங்கு வசதிகள் செய்துவைத்திருக்கிறோம்" என்று கூறுகிறார்.

பணியாளர்களின் எண்ணிக்கை:

"தற்போது புதிய பணியாளர்களை ஆட்சேர்க்கும் அவசியம் வரவில்லை. ஆனால், பணியாளர்களின் பற்றாக்குறை அடிக்கடி வருகிறது. விலங்குகளின் சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு கால்நடை மருத்துவர் இருக்கிறார். அவசர தேவைக்கு ஏற்ப, நாங்கள் மக்களை ஈடுபடுத்திக்கொள்வோம்.

விலங்குகளின் மருத்துவ வசதி நாளுக்கு நாள் மாறுபட்டுக் கொண்டே இருக்கும், அதனால் நிறைய பணியாளர்களை வேலைக்குசேர்ப்பது கையாள கடினமாக மாறிவிடும்" என்று கூறுகிறார்.

கொரோனா நேரங்களில் வந்த இன்னல்:

"கடந்த இரண்டு வருடங்கள் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது. உயிரியல் பூங்காவின் வருவாய் முற்றிலுமாக முடிவடைந்தபின், நாங்கள் எங்கள் சொந்த வளங்களைச் செலவழித்தோம். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும், எங்களிடம் உள்ள நிதி மிகவும் குறைவாக உள்ளது. 

நுழைவுக் கட்டணம் குழந்தைகளுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கிறோம். இது மறுபரிசீலனை செய்யப்படும் நிலையில் உள்ளது. ஏனெனில் இது 2011 இல் திருத்தப்பட்ட நுழைவுத் தொகை; இதை அமல்படுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது. எனவே, இந்தத் திருத்தம் விரைவில் நடந்தால், கிண்டி தேசிய பூங்கா சிறந்த நிலைக்கு வரும் என்று நம்புகிறோம்" என்று கூறுகிறார்.

தேசிய பூங்காவிற்கு வரும் நிதி:

"இந்த ஆண்டு பூங்காவின் மேம்பாட்டிற்காக 20 கோடி நிதி ஒதுக்குவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது. நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம். அதன் பிறகு நாங்கள் நல்ல நிலையில் இருப்போம் என்று நம்புகிறோம். ஆனால் அது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். அன்றாட நிர்வாகத்திற்கு, எங்களின் பிற உதவிகளை பயன்படுத்த வேண்டும்.

தற்போது தேசிய பூங்காவிற்கான முக்கிய தேவைகளை சரிசெய்து வருகிறோம். நாங்கள் சில அரசு சாரா நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம், அவர்கள் எங்களின் நிதி தேவைகளுக்கு உதவி செய்கிறார்கள்.கடந்த ஆண்டில், அதுவரை இயங்காமல் வைக்கப்பட்ட மூன்று வசதிகளை இயக்க ஆரம்பித்தோம்.

CSR நடவடிக்கைகளின் மூலம் கிண்டி தேசிய பூங்காவிற்கான நிதியைப் பெற முயற்சிக்கிறோம். எனவே இந்த ஆண்டு விலங்கு தத்தெடுப்பு, கூண்டு தத்தெடுப்பு போன்ற திட்டங்களை தொடங்குகிறோம். 

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆண்டில் தொடங்கப்பட உள்ளது. இவை நடந்தால், சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு கிண்டி தேசிய பூங்கா மிகவும் சிறந்த பொழுபோக்கு இடம் என்று  உறுதிப்படுத்துவது மிகவும் எளிது" என்று இ. பிரசாந்த் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu #Chennai #Guindy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment