ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குண்டுரி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 26 குக்கிராமங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கதம்பூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. கதம்பூர் கிராமத்திற்கு செல்ல காலை 5.30 மணிக்கு ஒரேயொரு பேருந்து மட்டுமே குண்டுரி கிராமத்திற்கு வரும். அதனால், பள்ளி மாணவர்கள் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பள்ளிக்கு தயாராகின்றனர். இந்த பேருந்தை தவறவிட்டால் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தை சுற்றி கடினமான பாதையில் நடந்துசென்று பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கும்.
அதேபோல், இரவு 8.30 மணிவரை பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து மீண்டும் அதே பேருந்தில் வீடுகளுக்கு செல்ல வேண்டும்.
இதுகுறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது. அதில், மாணவர்களின் பிரச்சனையை போக்க அவர்களுக்கென தனி பேருந்து ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாணவர்கள் மாலை 3.30 மணிக்கே வீட்டுக்கு செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக, மாணவர்களிடம் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி, மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பிவிடுவோம் என்ற ஆர்வத்தில் குண்டுரி கிராம மாணவர்கள் பள்ளியிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால், அந்த சின்னஞ்சிறிய மாணவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அங்கு, மக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் பேருந்து மட்டுமே இருந்துள்ளது. இதனால், மாணவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.
இதையடுத்து, கதம்பூர் கிராம மக்கள் மாணவர்களுக்கென தனியார் பேருந்தை ஏற்பாடு செய்தனர். மாலை 5 மணியளவில் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்கம்பாளையம் கிராம மாணவர்களும் மாலையில் 6.30 மணிக்கே பேருந்தில் தங்கள் கிராமத்துக்கு செல்வதால், அமைச்சரின் உத்தரவை தவறாக புரிந்துகொண்டு மக்கம்பாளையத்துக்கு பேருந்தை சீக்கிரமாக அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், உடனடியாக குண்டுரி மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்வது கடினம் எனவும், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா