உரிமைக்குழு நோட்டீசுக்கு பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் கோரி தலைமைச் செயலகத்தில் பேரவைச் செயலரை சந்தித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் மனு அளித்தனர். சட்டமன்ற கூட்டத் தொடரின்போது குட்கா விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, குட்கா விற்பனை செய்யப்படுவதை என்பதை காட்டுவதற்கு கையோடு அவற்றைகொண்டு வந்ததிருந்தனர். இந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பேரவைச் செயலரை சந்தித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் மனு அளித்தனர். உரிமைக்குழு நோட்டீசுக்கு பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: பெரும்பான்மையை இழந்துள்ள ஆட்சி என்பதால், இந்த ஆட்சிக்கு உரிமைக்குழுவை கூட்டுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. எனினும், எங்களது கடமைகளை நாங்கள் சரிவர செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், பேரவை செயலரிடம் கடிதம் அளித்துள்ளோம். சட்ட ரீதியில் தகவல்களை சேகரித்து தர வேண்டும் என்பதற்காக, 15 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளோம்.
ஆளுநர்
டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கடிதம் அளித்தனர். அப்போதே நான் ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். இதைத்தொடர்ந்து, எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை நேரடியாக சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். இதையும் தாண்டி, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் இந்த பிரச்சனையை தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு 109 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்பதை முன்னதாகவே கூறி வருகிறோம். ஆனாலும், ஆளுநர் மௌனமாக இருந்து வருகிறார். ஒருவேளை இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு தான் இந்த ஆட்சியை இயக்குகிறது என்பது உறுதியாகிவிடும் என்று கூறினார்.