குட்கா விவகாரத்தில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, ஆவணங்களை அழித்து குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதற்காக முதலமைச்சர் பழனிச்சாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள குட்கா மற்றும் போதைப்பாக்குகள் ஊழலை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரும், காவல் உயரதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு தவறுக்கு மேல் தவறுகளை செய்து வருகிறது.
வருமானவரித்துறையிடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொய் சொன்ன அரசு, அடுத்தக்கட்டமாக தலைமைச் செயலகத்திலிருந்து முக்கிய ஆவணம் திருட்டு போய்விட்டதாக கூறுகிறது. தலைமைச் செயலகத்திலேயே திருட்டு நடக்கும் நிலை தான் நிலவுகிறது என்றால் இந்த பினாமி அரசு இனியும் எதற்கு நீடிக்க வேண்டும். உடனடியாக பதவி விலகி விடலாமே?
கடந்த ஆண்டு வருமானவரித்துறை அறிக்கை கையில் கிடைத்ததுமே அதன் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் தான் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
இவ்வழக்கில் பல முக்கிய ஆதாரங்களைத் திரட்டிய சென்னை மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத அரசுக் போக்குவரத்துக் கழகத்தின் நெல்லைக் கோட்ட கண்காணிப்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஊழல்வாதிகளை காப்பாற்ற தமிழக அரசு எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்களாகும்.
தலைமைச் செயலகத்தில் இருந்த ஆவணங்கள் மாயமாகவில்லை; ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு விட்டது என்பது தான் எனது குற்றச்சாட்டு ஆகும். இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை விசாரணையில் நியாயம் கிடைக்காது.
எனவே, இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆவணங்களை அழித்து குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதற்காக முதலமைச்சர் பழனிச்சாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.