“குட்கா டைரியில்” இருப்பவரை டிஜிபி-யாக நியமனம் செய்தது வெட்கக் கேடானது: மு.க ஸ்டாலின்

டி.கே.ராஜேந்திரனை தமிழக காவல்துறை தலைவராக இரு வருடங்களுக்கு நியமித்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

By: Updated: June 30, 2017, 05:14:41 PM

ஒய்வுபெறும் நாளன்று தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரனின் நியமனத்தை உடனடியாக ரத்துசெய்து, அவர் மீதான “குட்கா புகார்” குறித்த விசாரணையை சந்திக்க ஏதுவாக, அவரை தமிழக காவல்துறை பணியிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரூ.40 கோடி லஞ்சப்புகாரில், மூன்று தேதிகளில் 60 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக, வருமான வரித்துறை சோதனையின் போது வெளிவந்துள்ள “குட்கா டைரியில்” இடம்பிடித்துள்ள தமிழக காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் டி.கே.ராஜேந்திரனை, அவர் ஓய்வுபெறும் தினத்தன்று தமிழக காவல்துறை தலைவராக நியமித்து தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே தலைகுனிவை தேடித் தந்துவிட்டது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான “குதிரை பேர” அதிமுக அரசு.

இதன்மூலம், போலீஸ் சீர்திருத்தம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அப்பட்டமாக மீறி, தமிழக காவல்துறையை அலங்கோலமான பாதைக்கு அழைத்துச் செல்லும் “குதிரை பேர” அதிமுக அரசின் இத்தகைய போக்கிற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் – ஒழுங்கு காவல்துறை தலைவர் பதவி என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளையும், ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் நிர்வகிக்கும் பதவி என்பது மட்டுமல்ல, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் மிக முக்கிய பணியில் காவல்துறையை திறமையாக பயன்படுத்த வேண்டிய பொறுப்பு மிகுந்த பதவியாகும்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை கலந்து ஆலோசனை செய்கிறோம் என்ற போர்வையில், தங்களுக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகளை, சட்டமன்ற – பாராளுமன்ற தேர்தல்களில் தங்களின் அராஜகத்திற்கு துணைபோகும் அதிகாரிகளை மட்டும் தொடர்ந்து டி.ஜி.பி.,க்களாக நியமித்து, தமிழக காவல்துறையின் மாண்பை மட்டுமல்ல, அந்தத் துறைக்குத் தேவையான தலைமைப் பண்பையே இன்றைக்கு முற்றிலும் சீர்குலைத்து விட்டது அதிமுக அரசு.

இதற்கு முன்பு இதேபோன்று, சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி., பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்த ராமானுஜம் அவர்கள், ஓய்வுபெறும் தேதியில் 2 வருடங்களுக்கு தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர் “அரசு ஆலோசகராக” நியமிக்கப்பட்டு, ஆளுங்கட்சியின் தேர்தல் அதிகாரியாகவே பணியாற்றினார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதேபோல், இப்போது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக “கூடுதல்” பொறுப்பு வகித்த டி.கே.ராஜேந்திரன் ஓய்வுபெறும் தேதியில் தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவரை “கூடுதல் பொறுப்பில்” டி.ஜி.பி., ஆக இரு வருடங்களோ, ஒரு வருடமோ வைத்துக் கொண்டு இருந்து, பிறகு அதே அதிகாரியை தமிழ்நாடு காவல்துறை தலைவராக நியமிப்பது அதிமுக அரசின் வழக்கமாகி விட்டது. இதற்கு முன்பாக, இவரை விட சீனியர் அதிகாரிகள் இருந்தும் சட்டம் – ஒழுங்கை கவனிக்கும் டி.ஜி.பி., பதவி இவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அதோடு, மேலும் இரு பதவிகளையும் இவர் கவனித்தார்.

இதனால் கூடுதல் டி.ஜி.பி.,க்களுக்கு வழங்கப்பட வேண்டிய டி.ஜி.பி., பதவி உயர்வே திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டது. இவருக்கு மேல் பணியாற்றிய சீனியர் போலீஸ் அதிகாரிகள் பலர் தமிழக காவல்துறை தலைவர் பதவிக்கு வர முடியாமலேயே ஓய்வுபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

இந்தமுறையும், 1983 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான கி.ராதாகிருஷ்ணன், 1984-ம் ஆண்டு பேட்சில் மூத்த அதிகாரியான கே.பி.மகேந்திரன் அவர்களும், உரிய தகுதிகளுடன் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கே.பி.மகேந்திரன் அவர்களின் பணிக்காலம் ஏறக்குறைய இரு வருடங்கள் தொடர்கிறது.

ஆனால் இந்த இரு அதிகாரிகளையும் புறக்கணித்து விட்டு, “யூ.பி.எஸ்.சி., பேனல்” என்ற அடிப்படையில் மேற்கண்ட இரு அதிகாரிகளுக்கும் ஜூனியராக இருக்கும் டி.கே.ராஜேந்திரனை தமிழக காவல்துறை தலைவராக இரு வருடங்களுக்கு நியமித்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

டி.கே.ராஜேந்திரன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது, குட்கா வியாபாரிகள் மூலம் அவருக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற “ரூ.60 லட்சம்” லஞ்சம் தொடர்பான பிரச்னையை தமிழக சட்டமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் என்றமுறையில் எழுப்பியபோது, “இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது”, என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அது ஒரு கண்துடைப்பு என்றுகூறி, திராவிட முன்னேற்றக் கழகம் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று “குட்கா டைரியில்” இடம்பெற்றவரை தமிழக காவல்துறையின் தலைவராக நியமித்துள்ளது வெட்கக் கேடானது.

தமிழக காவல்துறையின் ஒழுக்கம் – கட்டுப்பாடு ஆகியவற்றினால், கழக ஆட்சி காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பெயர்பெற்றிருந்த தமிழக காவல்துறைக்கு மிகப்பெரும் அவமானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேடித் தந்திருக்கிறார்.

எத்தனை நாளைக்கு இந்தப் பதவியில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு மோசமாக இந்த மாநில நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைக்கிறோம் என்றரீதியில் முதலமைச்சர் செயல்படுவது வேதனையளிக்கிறது.

“ஓய்வு பெற்ற பிறகு, காவல்துறை தலைவர் பதவியில் இருப்பவருக்கு 2 வருடம் பதவிக்காலம் வழங்க வேண்டும், என்ற பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது”, என்று உச்சநீதிமன்றத்திலேயே மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்ட பிறகும், அதை வலியுறுத்தி பிரமாண வாக்குமூலமே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும், தமிழகத்தில் நடக்கும் டி.ஜி.பி., நியமன கூத்துக்களை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு.

முன்பு ராமானுஜம், அவரைத் தொடர்ந்து தற்போது டி.கே.ராஜேந்திரன் என ஓய்வுபெற்ற பிறகு இரு வருடங்கள் மாநில காவல்துறை பதவியை கொடுப்பதை மத்திய உள்துறை அமைச்சகமும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் அனுமதித்திருப்பது இன்னும் வேதனையளிப்பதாக இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அணிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசும் கண்ணை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

“குட்கா டைரி” விவகாரத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரியை, “கூவத்தூர் கொண்டாட்டத்தில்” மனமுவந்து ஒத்துழைத்த காரணத்திற்காக, தமிழக டி.ஜி.பி.,யாக நியமித்திருப்பதன் மூலம் தமிழக காவல்துறையே இன்றைக்கு வெட்கித் தலைகுனிந்து நிற்கும் நிலை உருவாகி விட்டது.

இவரின் கீழ் போலீஸ் அதிகாரிகள், குறிப்பாக நேர்மையான போலீஸ் அதிகாரிகள் எப்படி பணியாற்ற முடியும் என்ற கேள்வியை, “குதிரை பேர அரசு” ஏற்படுத்தி, தமிழக காவல்துறையை நெருக்கடியில் ஆழ்த்தி விட்டது.

ஆகவே ஒய்வுபெறும் நாளன்று தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரனின் நியமனத்தை உடனடியாக ரத்துசெய்து, அவர் மீதான “குட்கா புகார்” குறித்த விசாரணையை சந்திக்க ஏதுவாக, அவரை தமிழக காவல்துறை பணியிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளைப் புறக்கணிக்காமல், முறைப்படி டி.ஜி.பி., பேனல் தயாரித்து, தகுதியானவர்களில் ஒருவரை, தலைமைப் பண்பு கொண்ட ஒருவரை, தமிழக காவல்துறை தலைவராக நியமிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Gutka scam mk stalin condemns tn govt appointing t k rajendran as the tn dgp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X