குட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது: ஹைகோர்ட்

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில்,
குட்கா உள்ளிட்ட பொருட்களை உணவுப் பொருட்கள் இல்லை என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய துறை சார்பில் குட்கா பொருட்கள் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தியும் அவற்றை தடை செய்தும் உத்தரவு பிறபிக்கப்பட்டது. இது போன்ற பொருட்களில் அதிக அளவு புகையிலை பொருட்கள் பயன்படுத்தபடுவதால் அது மனித உடலுக்கு பாதிப்பு என்ற வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2012 அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் குட்கா பொருட்களில் அதிக அளவு நிக்கோடின் கலந்து இருப்பதால் இதன் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கில் குட்கா உள்ளிட்ட பொருட்களை கட்டாயம் தடைசெய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்து.

மத்திய சுகாதாரத் துறை ஆய்வில் புகையிலை பொருட்களின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து  இருந்து மக்களை பாதுகாக்க அந்த அந்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் கடந்த 2013  மே மாதம் மாநில முழுவதும் குட்கா, பான் மாசலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார். இதனையெடுத்து கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பான அறிவிப்பு அரசு இதழிலும் வெளியிடப்பட்டது.

அதன் படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு  குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் சேமித்து வைத்து விற்பதற்கு தடை விதிப்பதாக வெளியிடப்பட்டது.

புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசு தெரிவித்தும் முதலமைச்சர் அறிவித்த பிறகும் அதை அரசு இதழில் வெளியிட இரண்டு ஆண்டுகள் கால தாமதம் ஆனது. இதிலிருந்து  பான் மசாலா மற்றும் குட்கா மாபியாக்களின் வலிமை எந்த அளவுக்கு உள்ளது என்று தெரியவந்துள்ளது.

பல கால தாமதத்திற்கு பிறகு கடந்தாண்டு வருமான வரிதுறையினர் சென்னையில் உள்ள குட்கா பான்மசாலா தயாரிப்பு நிறுவனங்களில்  நடத்திய  சோதனையில் 250 கோடி ரூபாய் அளவிற்கான வர்த்தக பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் பல அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகள்,  அமைச்சர்கள்  உள்ளிட்டோர் பான் மசாலா குட்கா விற்பனைக்கு  ஆதரவாக செயல்பட பணம் அளிக்கபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆவணங்களில் உள்ள நபர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்ககோரி தலைமை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குட்கா தயாரிப்பாளரான மாதவராவிடம் இருந்து பெறப்பட்ட ரகசிய குறிப்புகளில் சுகாதரத் துறை அமைச்சர் விஐயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், காவல்துறை தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிகிறது.  மேலும் கடந்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 56 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதைப்போன்று டிஜிபி ராஜேந்திரன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பணை செய்ய அனுமதி அளித்துள்ளனர். இதனை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக சிபிஐ. விசாரிக்க வேண்டும் என்று   எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டபேரவையில் கேள்வி எழுப்பினார் . வருமான வரித் துறை சோதனையில் பெயர் இடம் பெற்ற அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்து.

மேலும் வருமான வரித்துறையின் சோதனையில்  கிடைத்த ஆவணங்களை  அப்போதைய தலைமை செயலாளர்  ராமமோகனராவ் விற்கும் , லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அளிக்கப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு வருமான வரித்துறையால் பெறப்பட்டது. ஆனால் இதன்பிறகு நடைபெற்ற அனைத்து விவாதங்களிலும் இது தொடர்பான ஆவணங்களை அரசு வெளியிடவில்லை.

இதில் தமிழத்தின் டிஜிபி சம்பட்டு இருபதற்கான ஆவணங்கள் இருப்பதால் உரிய விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. இதில் அதிகாரிகள் முதல் அனைத்து தரப்பினரும் உடந்தையாக இருப்பதால் மாநில் உயர் காவல் துறை அதிகாரிகள் பலர் சம்பந்தபட்டிருப்பதால்  உரிய விசாரணை நடத்த வாய்ப்பில்லை.

எனவே தடை செய்யப்பட்ட பான்மசாலா  விற்பனையில்  அதிகாரிகள் மீது அமைச்சர்கள் தொடர்புகளை விசாரிக்க சிபிஐ. வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் வருமான வரித்துறையால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ. அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை கொடுத்துள்ள ஆவணங்கள் படி காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தன்னிச்சையான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன் பின்னர், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, மதுரையில் இது தொடர்பாக ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்தில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதுரையில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கும், இதற்கும் வேறுபாடு உள்ளது. இது தீவிரமான குற்றச்சாட்டு என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முற்றிலும் முகாந்திரம் உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close