Advertisment

குட்கா ஊழல்: அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK Leader Ramadosss, Ramadoss

தமிழகத்தில் ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சி தான் நடைபெறுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்த உண்மை குறித்து தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலை மூடி மறைக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வந்த எம்.டி.எம் குட்கா ஆலைகளில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில், போதைப்பாக்கு விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின.

அவற்றின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு வருமானவரித் துறை முதன்மை ஆணையர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி எழுதியிருந்தார். அதன்பின்னர் ஓராண்டு நிறைவடையவிருக்கும் நிலையில் அதன் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகக் காவல்துறை உயரதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு மாதாமாதம் கையூட்டு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

எம்.டி.எம் குட்கா ஆலையின் ஒரே ஒரு பங்குதாரரிடம் இருந்து, ஒரு குறிப்பிட்டக் காலத்தில் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பல கோடிகள், சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு ரூ.60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதை வருமானவரித்துறை விசாரணையின் போது குட்கா ஆலையின் பங்குதாரரான மாதவராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு மாதா மாதம் கையூட்டு வழங்கியது தவிர தீபஒளி, கிறித்துமஸ் போன்ற திருநாள்களுக்கும் கையூட்டு கொடுத்து வந்திருப்பதாக குட்கா நிறுவனங்களின் அதிகாரிகள் வருமானவரித்துறையிடம் கூறியுள்ளனர்.

இந்தக் கணக்குகள் அனைத்தும் எம்.டி.எம் குட்கா என்ற ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது தான். இது தவிர சென்னை செங்குன்றத்தில் ஏராளமான குட்கா ஆலைகள் செயல்பட்டு வந்தன. சுகாதார அமைச்சரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 4 குட்கா ஆலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தன.

இந்த ஆலைகளில் இருந்து மட்டும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாதம் ரூ.6 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இவ்வளவுக்கு பிறகும் இந்த குற்றச்சாற்றுகள் குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விசாரணைக்கும் ஆணையிடவில்லை. இதுதவிர சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க பெயரளவில் விசாரணைக்கு ஆணையிடப்பட்ட போதிலும், அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழக அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தும்படி வருமானவரித்துறை கடிதம் எழுதுவதும், அதை தமிழக அரசு கிடப்பில் போடுவதும் இது முதல்முறையல்ல. மணல் கொள்ளை சேகர் ரெட்டியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் தற்போதைய தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியிருந்தது.

அதுமட்டுமின்றி, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இவற்றில் எந்த பரிந்துரை மீதும் தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊழல் குற்றவாளிகளை காப்பாற்றும் பணியை மட்டுமே செய்து வருகிறது. இது வெட்கக்கேடானது.

ஜனநாயகம் எனப்படுவது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாகும். ஆனால், தமிழகத்திலோ ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் குட்கா ஊழல், மணல் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஊழல் குற்றவாளிகளுக்கும், அவர்களை பாதுகாத்த ஆட்சியாளர்களுக்கும் மக்கள் தண்டனை அளிப்பர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vijayabaskar Pmk Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment