Advertisment

குட்கா டைரியில் பெயர் : டி.கே.ராஜேந்திரனை காப்பாற்றிய அத்வானி வழக்கு!

டி.கே.ஆரை காப்பாற்றிய அந்த ‘ஜெயின் ஹவாலா டைரி’ வழக்கு, இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட ஒரு வழக்கு. காரணம், அதில் சிக்கியவர் பா.ஜ.க.வின் அப்போதைய நம்பிக்கை நட்சத்திரமான எல்.கே.அத்வானி!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்கா டைரியில் பெயர் : டி.கே.ராஜேந்திரனை காப்பாற்றிய அத்வானி வழக்கு!

குட்கா டைரியில் பெயர் இருந்தும், டி.கே.ராஜேந்திரனை காப்பாற்றியது அத்வானி வழக்குதான் என்பது தெரிய வந்திருக்கிறது.

Advertisment

கடந்த ஆண்டு (2016) ஜூலை 8-ம் தேதி சென்னையில் குட்கா தயாரிப்பாளர்களின் குடோன்களில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு டைரியில் அமைச்சர் ஒருவருக்கும், உயர் போலீஸ் அதிகாரிகள் இருவருக்கும் பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் இருந்தன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அப்போதைய டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோருக்கு வருமான வரித்துறையின் முதன்மை (புலனாய்வு) ஆணையர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதினார். அந்த டைரியில் குறிப்பிடப்பட்ட பெயர்களில் ஒன்று, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் என கூறப்பட்டது.

அதே டி.கே.ராஜேந்திரனுக்கு அண்மையில் பணி ஓய்வுக்கு பிறகும் டி.ஜி.பி.யாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டை சார்ந்த தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி.யின் மதுரை மாவட்டச் செயலாளர் கதிரேசன் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ‘வருமான வரித்துறையில் இருந்து எந்த ஆவணங்களும் தலைமைச் செயலாளருக்கு வரவில்லை’ என குறிப்பிட்டார். அதன்பிறகே வருமான வரித்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலேயே மாயமாகியிருப்பது தெரிந்தது.

இந்த விவகாரங்களை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குட்கா நிறுவனத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை உள்ளடக்கிய விஜிலன்ஸ் கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட்டது. தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமானது குறித்தும் தனியாக விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம், குட்கா அதிபர்களின் டைரியில் பெயர் இடம்பெற்ற காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இதில் டி.கே.ராஜேந்திரனை தண்டிக்க முடியாது என்றும், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதில் தவறில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பின்புலமாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருப்பது, ‘ஜெயின் ஹவாலா டைரி’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவைத்தான்!

டி.கே.ஆரை காப்பாற்றிய அந்த ‘ஜெயின் ஹவாலா டைரி’ வழக்கு, இந்திய அரசியலையே புரட்டிப் போட்ட ஒரு வழக்குதான். காரணம், அதில் சிக்கியவர் பா.ஜ.க.வின் அப்போதைய நம்பிக்கை நட்சத்திரமான எல்.கே.அத்வானி!

அந்த ஊழல் வழக்கு வெளிப்பட்ட விதமும், இதே போல ஒரு ரெய்டுதான்! 1991-ல் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடியான சில சோதனைகளை நடத்துகிறார்கள். அப்போது ஹவாலா புரோக்கர்கள் சிலரிடம் இருந்து தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை ஆவதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில ஹவாலா புரோக்கர்களை குறி வைத்து ரெய்டை முடுக்கினார்கள்.

எஸ்.கே.ஜெயின் என்கிற ஹவாலா புரோக்கரின் அலுவலகங்களில் நடந்த ரெய்டில் கிடைத்த டைரியில் அரசியல்வாதிகள் பலருக்கு லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகள் இருந்தன. குறிப்பாக எரிசக்தி உள்ளிட்ட சில துறைகளில் டென்டர் ஒதுக்கீடுக்காக இந்த லஞ்சம் பறிமாறப்பட்டதாக சொல்லப்பட்டது.

அப்படி ஒரு டைரியில், ‘எல்.கே.ஏ. - 68.5 லட்சம்’ என குறிப்பு இருந்தது. இதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா 65.8 லட்சம் ரூபாயும், மற்றொரு முன்னாள் அமைச்சர் பி.சிவசங்கர் 26.9 லட்சமும், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் 5 லட்சம் ரூபாயும் பெற்றதாக குறிப்புகள் இருந்தன. மொத்தம் 115 அரசியல்வாதிகளுக்கு 65.49 கோடி ரூபாய் சப்ளை ஆனதாக சொல்லப்பட்டது. இந்த டைரிகள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. வினித் நாராயன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து, இந்த விசாரணையை முடுக்கி விட்டார்.

1988-1991 இடையிலான காலகட்டத்தில் இந்த லஞ்சப் பணம் பறிமாறப்பட்டதாக சொல்லப்பட்டாலும், 1996-ல்தான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது அத்வானி, லோக்சபா எதிர்கட்சித் தலைவர்! தன் மீதான புகார் பதிவானதும், அன்று மாலையே எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார் அத்வானி. ‘ராஜினாமா செய்யவேண்டாம். வழக்கை சட்டப்படி சந்திப்போம்’ என வாஜ்பாய் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சொன்னதை அத்வானி ஏற்கவில்லை.

‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் மூலமாக விடுவிக்கப்பட்ட பிறகுதான், மீண்டும் நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன்’ என வெளிப்படையாக அப்போது சொன்னார் அத்வானி. அதேபோல 1998-ல் அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது. அதன்படியே பிறகு அத்வானி தேர்தலில் ஜெயித்து, துணைப் பிரதமராகவும் உட்கார்ந்தார்.

அதாவது, ‘இண்டியன் எவிடன்ஸ் ஆக்ட், பிரிவு 34-ன் படி வணிக ரீதியான கணக்கு வழக்குகளில் உள்ள டைரி பதிவின் அடிப்படையில் குற்றச்சாட்டை பதிவு செய்ய முடியாது’ என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அந்த அடிப்படையிலேயே சென்னையில் குட்கா தயாரிப்பாளர்களின் டைரியில் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இருந்தும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை இல்லை. ஆனாலும் இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது குறிப்பிட்டத்தக்கது.

T K Rajendran Ips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment