விஜய்யின் 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதனால் டென்ஷனான தமிழக பாஜகவினர், படத்தில் இருந்து அக்காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "ஜோசப் விஜய்யின் மோடி மீதான கோபமே மெர்சல்" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள், பொதுஜனம், திரைத் துறையினர் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதையடுத்து, தான் அப்படி கூறியதற்கு விளக்கமளித்த ஹெச்.ராஜா, "மெர்சல் படத்தில் விஜய், 'கோயிலைக் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டலாமே' என்று சொல்கிறார். ஏன்! சர்ச்சுக்கு பதிலாக மருத்துவமனையை கட்டலாம் என சொல்ல வேண்டியது தானே? படத்தில் அவர் மதவாதத்தை கையில் எடுத்ததால் தான், நான் ஜோசப் விஜய் என்று கூறினேன்" என்றார்.
அதன்பின்னும், ரசிகர்கள் ஜோசப் விஜய் என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி, அதை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினர். விஜய்க்கு அன்பு என்றால், ஜோசப் விஜய்க்கு பேரன்பு என்றெல்லாம் ட்வீட்களை பறக்கவிட்டனர்.
இந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் ஹெச்.ராஜா தனது ட்விட்டரி பக்கத்தில் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். நடிகர் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை படத்தையும், விஜய் நன்றி தெரிவித்து ஒரு பத்திரிக்கைக்கு எழுதிய லெட்டர் பேடையும் இணைத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையில், பெயர் என்னுமிடத்தில் ஜோசப் விஜய் என்றும், லெட்டர் பேடில் தலைப்புக்கு மேல் 'ஜீசஸ் சேவ்ஸ்' என்றும், பெயரில் ஜோசப் விஜய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு படங்களையும் பதிவிட்டு, தனது கேப்ஷனில் 'உண்மை கசக்கும்' என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
மத உணர்வைத் தூண்டும் இந்த விவகாரத்தை ஹெச்.ராஜா மீண்டும் கையில் எடுத்துள்ளது சரியானது தானா என்பதை அவர் தான் கூற வேண்டும்.