முதுகெலும்பு இல்லாத கோழை இந்த கமல்ஹாசன்: ஹெச்.ராஜா

முதல்வர் கனவு காண கமல்ஹாசனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால்....

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டரில் சில கருத்துகளை பதிவிட்டார். அவற்றினை தனது ஆஸ்தான ஸ்டைலான கவிதை வடிவில் எழுதியிருந்தார். பலருக்கும் அவரது ட்வீட் புரியவில்லை. ரசிகர்களும் “ஒன்னும் புரியலையே தலைவா” என்று சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடத் துவங்கிவிட்டனர். அவரது ட்வீட்டை சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில், “நான் முடிவு செய்துவிட்டால் முதல்வர் ஆகிவிடுவேன். தோற்றால் போராளியாவேன்” என்பது தான். ஆனால், அரசியல் பார்வையோடு தான் இதை பதிவிட்டிருக்கிறாரா என்பதை கமல் தான் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், தனது பதிவு புரியாதவர்கள் நாளை (இன்று) ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகவுள்ள செய்தியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அப்படி என்னதான் அறிவிப்பு வரும் என்று பார்த்தால், வரும் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள புரோ கபடி லீக்கில், ‘தமிழ் தலைவாஸ்’ அணிக்கு பிராண்ட் அம்பாசிடராக கமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு தான் வெளியானது.

இதனால், கமல் அரசியலுக்கு வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கூறிய நடிகை கஸ்தூரி, புரோ கபடி லீக் அறிவிப்பு வந்தவுடன், “கடைசியில் கபடிக்கு தான் இத்தனை தலையபிச்சிக்க வெச்சாராமா?” என்று கலாய்த்துள்ளார். முன்னதாக, கமலின் இந்த கவிதை அறிக்கையை, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து கஸ்தூரி வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், இந்த ட்வீட்டினால் கமலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ஏற்கெனவே நான் சொல்லியிருப்பது போல், நாட்டில் இருக்கிற மக்கள்தொகையில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும், அரசியலில் வருவதற்கும் கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. இதனால், முதல்வர் கனவு காண கமல்ஹாசனுக்கும் உரிமை உண்டு. இதை மறுப்பதற்கு எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆனால், முதல்வர் பதவியில் உட்காருபவர் எப்படி இருக்க வேண்டுமென்றால், அச்சமில்லாமல் முதுகெலும்போடு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ஒரேடியாக அழுது, புலம்பி இந்த நாட்டை விட்டே ஓடிப்போகப்போகிறேன் என்று சொன்ன கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை. அவர் நாளை முதலமைச்சரானால் தமிழ்நாட்டோட கதி என்னவாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அவர் ட்வீட்டில் முடிவெடுத்தால் முதல்வர் என்கிறார். அவர் முடிவு எடுத்தாலும் ஒருக்காலும் தமிழக முதல்வராக வர முடியாது. காரணம் அவர் முதுகெலும்பற்ற ஒரு கோழை. அதனால், மக்கள் அவரை எல்லாம் ஏற்கவே மாட்டார்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

×Close
×Close