மு.க.ஸ்டாலின்-ஹெச்.ராஜா திடீர் சந்திப்பு இன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்பட்ட ஒரு விழாவே இந்த சந்திப்புக்கான காரணம்.
மு.க.ஸ்டாலினும், ஹெச்.ராஜாவும் அரசியல் ரீதியாக எதிரெதிர் திசைகளில் இயங்குகிறவர்கள். இவர்கள் இருவரும் இதுநாள் வரை நட்பு ரீதியாகக்கூட சந்தித்துக் கொண்டதில்லை. பாஜக.வின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஹெச்.ராஜா, அதிரடியான இந்துத்வ கருத்துகளுக்கு சொந்தக்காரர். அவரது கருத்துகளை கண்டித்து அறிக்கை விடுவதை திமுக செயல் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் அடிக்கடி செய்து வருகிறார்.
இந்தச் சூழலில் இன்று (செப்டம்பர் 14) பகல் 12.30 மணிக்கு திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, ஹெச்.ராஜா சந்திக்கிறார் என்ற தகவல் வெளியானதும், மொத்த அரசியல் வட்டாரமும் பரபரப்பானது. சமீபத்தில் தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஹெச்.ராஜா விண்ணப்பம் செய்திருக்கிறார். அந்தத் தேர்தலில் அவருக்கு ஆளும்கட்சி ஆதரவாக இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தமீமும் அன்சாரி, தனியரசு ஆகியோர் கண்டன அறிக்கை விட்டனர். தொடர்ந்து ஸ்டாலினும் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார். எனவே அதற்கு ஸ்டாலினின் ஆதரவை கேட்டு ஹெச்.ராஜா சந்திக்கவிருப்பதாக முதலில் தகவல்கள் பரவின.
ஆனால் பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘செப்டம்பர் 29-ம் தேதி ஹெச்.ராஜாவுக்கு 60 வயது பூர்த்தியாகிறது. இந்த விழாவை விமரிசையாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். இதில் பாஜக.வின் அகில இந்திய தலைவர் அமித்ஷா பங்கேற்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திலும் கட்சி சார்பற்ற அனைத்து தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என ஹெச்.ராஜா விரும்புகிறார். அதற்காகவே இந்த சந்திப்பு’ என்கிறார்கள்.
சந்திப்பு முடிந்து, ஹெச்.ராஜா நிருபர்களை சந்திக்கும்போது முழு தகவல்கள் தெரிய வரும்.