அனைவரும் தமிழக பாஜக தலைவர்களால் விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்துள்ளது என்கின்றனர். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டில் விஜய் என்கிற டாப் ஹீரோ படத்தின் விளம்பரத்திற்கு, விஜய் என்ற பெயரே போதும். வேறு ஒன்றுமே தேவையில்லை... இயக்குனரே இரண்டாம் பட்சம்தான்.
இருந்தாலும், படத்தின் வசூலை சற்று உயர்த்த பயன்பட்டிருக்கிறார்கள் பாஜகவினர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் மெர்சல் படத்தால் அதிக லாபம் அடைந்தது தமிழக பாஜக தலைவர்கள் தான். கடந்த மூன்று நாட்களாக மெர்சல், விஜய், ஹெச்.ராஜா. தமிழிசை, பாஜக, பக்தாள் ஆகிய வார்த்தைகள் தான் கூகுள் தமிழ் சேர்ச்சில் டாப் லிஸ்டில் உள்ளவை. இதில், மெர்சல் மற்றும் விஜய்யை கழித்து விட்டு பாருங்கள், யாருக்கு உண்மையில் பப்ளிசிட்டி என்று. மூன்று நாட்களாகவே தொடர்ந்து தங்களை டைம்லைமில் வைத்துக் கொண்டு இருப்பதே தமிழக பாஜகவினர் நிகழ்த்திக் காட்டிய மிகப்பெரிய சாதனை தான்.
அதிலும், மெர்சல் படத்தை நெட்டில் பார்த்தேன் என ஹெச்.ராஜா சொன்ன பிறகு, ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு எதிராக எழுந்துவிட்டது. (ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை என்பது தனி செய்தி!) எப்படி அவர் நெட்டில் புதுப் படத்தை பார்க்கலாம்? பார்த்தது மட்டுமில்லாமல் இவ்வளவு ஒப்பனாக எப்படி அவர் அதை பொதுவெளியில் சொல்லலாம்? என சினித் துறையைச் சேர்ந்த பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹெச்.ராஜா தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "மத்திய அரசு குறித்து தவறான தகவல்கள் 'மெர்சல்' திரைப்படத்தில் வந்துள்ளதாக எனக்கு போனில் கூறப்பட்டது. மேலும், அரசை விமர்சிக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தான் நான் பார்த்தேன். அந்த குறிப்பிட்ட காட்சிகளை மட்டும்தான் நான் பார்த்தேன் என்று கூறியிருந்தேன். ஆனால், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி வரும் காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வந்துவிட்டன. அது எனக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் பார்த்தேன். அதை நான் யாருக்கும் அனுப்பக் கூட இல்லை. அப்படி அனுப்பி இருந்தால் கூட, நான் தார்மீக ரீதியில் தவறிழைத்துவிட்டேன் என்று கூறலாம். என் போனுக்கு வரும் ஒரு வீடியோவை நான் ஏன் பார்க்கக் கூடாது?" என்று தெரிவித்துள்ளார்.
ஆக, நான் படம் முழுவதும் பார்க்கவில்லை. சமூக தளங்களில் ஷேர் செய்யப்படும் சில காட்சிகளை மட்டுமே பார்த்தேன் என்கிறார்.