காங்கிரஸ் தலைவரான தனது தந்தை குமரி அனந்தனை நலம் விசாரிக்க தமிழிசையே வராத நிலையில், ஹெச்.ராஜா முந்திக்கொண்டது பரபரப்பாக பேசப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு கோயில் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் கோரிக்கை வைத்து போராடி வருகிறார். இதற்காக அண்மையில் சென்னையில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு நடைபயணம் மேற்கொண்டார் குமரி அனந்தன்.
அந்தப் பயணத்தின் நிறைவில் அவர் உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது, போலீஸார் அவரை அப்புறப்படுத்தி சென்னையில் அவரது இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார்கள். வீட்டிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த குமரி அனந்தனை காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்தனர்.
அடுத்த சில நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் குமரி அனந்தன். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பெரும்பாலான தலைவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் குமரி அனந்தனை சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரும்கூட யாரும் எதிர்பாராதவிதமாக இரு தினங்களுக்கு முன்பு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். குமரி அனந்தனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் அவர்.
குமரி அனந்தனை நேரில் சந்தித்து நலன் விசாரிக்காத ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருந்து வந்தது. குமரி அனந்தனின் மகள் தமிழிசை செளந்தரராஜன்தான் தமிழக பாஜக தலைவர் என்றாலும், அரசியல் சர்ச்சைகளை தவிர்க்க விரும்பி அவர் நேரில் செல்லவில்லை. ஆனால் தனது கணவரும், மருத்துவருமான செளந்தரராஜன் மூலமாக தனது தந்தையை நலம் விசாரித்தார் தமிழிசை.
இந்தச் சூழலில் பல்வேறு தளங்களில் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவரான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெறும் குமரி அனந்தனை சந்தித்து நலம் விசாரித்த அவர், விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்கும் குமரி அனந்தனின் கோரிக்கைக்கு பாஜக-வின் ஆதரவையும் தெரிவித்தார் ஹெச்.ராஜா.
இன்று காலை இராயப்பேட்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா வின் கனவை நனவாக்க பாரத அன்னை கோயில் அமைந்திட பா.ஜ.க வின் ஆதரவை தெரிவித்தேன். pic.twitter.com/hIJs5MOHos
— H Raja (@HRajaBJP) November 11, 2017
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ஹெச்.ராஜா, ‘இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவாவின் கனவை நனவாக்க பாரத அன்னை கோயில் அமைந்திட பா.ஜ.க வின் ஆதரவை தெரிவித்தேன்.’ என குறிப்பிட்டிருக்கிறார் ஹெச்.ராஜா.
தமிழிசையே சந்திக்காத நிலையில், ஹெச்.ராஜா திடீரென விசிட் அடித்து குமரி அனந்தனை சந்தித்தது ஆச்சர்யமாக பேசப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.