ஹெச்.ராஜா மணிவிழாவில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு வயது 60. இதையொட்டி எச்.ராஜா- லலிதா தம்பதியர் மணி விழா சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செப்டம்பர் 27-ல் (நேற்று) நடைபெற்றது. இந்த விழாவுக்கு சர்வ கட்சிகளின் முக்கிய தலைவர்களை நேரில் சென்று ஹெச்.ராஜா அழைத்திருந்தார். அதை ஏற்று பெரும்பாலான மாற்றுக் கட்சித் தலைவர்கள் வந்து வாழ்த்தினார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,
தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், அகில இந்திய மூவேந்தர் முன்ணணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டு எச்.ராஜா- லலிதா தம்பதியை வாழ்த்தினர்.
பா.ஜ.க. தேசிய துணை தலைவர் சந்தோஷ் ஹெக்டே, தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி., துணை தலைவர் சக்ரவர்த்தி, பொதுசெயலாளர் கரு நாகராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் வேதா சுப்பிரமணியம், தேசிய இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில செயலாளர் ஜி.சுரேஷ் கர்ணா, வர்த்தகர் அணி செயலாளர் சி.ராஜா, மீனவர் அணி தலைவர் சதீஷ் உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.