கனிமொழி பற்றி ஹெச்.ராஜா ட்வீட் : திமுக கண்டனம், பல இடங்களில் போராட்டம்

கனிமொழி குறித்து ஹெச்.ராஜாவின் பதிவுக்கு திமுக கண்டனம் தெரிவித்தது. பல்வேறு இடங்களில் திமுக.வினர் ஹெச்.ராஜாவின் உருவபொம்மை எரித்தனர்.

By: Updated: April 18, 2018, 04:57:52 PM

கனிமொழி குறித்து ஹெச்.ராஜாவின் பதிவுக்கு திமுக கண்டனம் தெரிவித்தது. பல்வேறு இடங்களில் திமுக.வினர் ஹெச்.ராஜாவின் உருவபொம்மை எரித்தனர்.

கனிமொழி எம்.பி.யை மறைமுகமாக தாக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். திமுக.வினர் மத்தியில் இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

கனிமொழியை குறி வைத்து ஹெச்.ராஜா வெளியிட்ட அந்த ட்வீட்டின் பின்னணி இதுதான்! கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நேற்று தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்திடம் செய்தியாளர்கள் காரசாரமாக கேள்விகளை எழுப்பினர். அந்த சந்திப்பின் முடிவில், ‘தி வீக்’ ஆங்கில இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் கன்னத்தில் ஆளுனர் தட்டிவிட்டுச் சென்றது சர்ச்சை ஆனது.

கனிமொழி எம்.பி. இந்த விவகாரத்தில் மேற்படி பத்திரிகையாளருக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டார். இதையொட்டி ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.’ என பதிவிட்டார்.

ஹெச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு எதிராக சமூக வலைதளங்களில் இன்று திமுக.வினர் கொந்தளித்து தீர்த்தனர். ஹெச்.ராஜாவை தாக்கும் விதமாக ‘ஹேஷ்டேக்’களை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கினார்கள். திமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் சரவணன் தனது ட்விட்டர் பதிவில், ‘இவர் ஒரு மன நோயாளி என்பதை உயர் நீதி மன்றமே கேள்வி கேட்டிருக்கிறது? நம் கேள்வியெல்லாம் பாஜக இப்படிப்பட்ட ஒரு கேவலமான பிறவியை தேசிய செயலாளராக வைத்திருக்கிறதே? இந்த கருத்துக்களை பாஜக ஆதரிக்கிறதா? இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை, பாஜக ஆட்சி என்ற ஒரே திமிரும் பொறுக்கித்தனமும் தானே இது!’ என குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக.வின் மற்றொரு செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் மனுராஜ், ‘பாஜக.வின் கொள்கை இதுதான்! பாஜக.வினரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நிற்பவர்களை தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வது, தாக்குவது அவர்களின் கலாச்சாரம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் பலரும் ஹெச்.ராஜா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையே ஹெச்.ராஜாவுக்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் ஹெச்.ராஜாவின் உருவப் பொம்மையை எரித்து திமுக.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடலூரில் நகர செயலாளர் ராஜா தலைமையில் திமுகவினர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, கோவை, மேலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹெச். ராஜாவின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:H raja tweets about kanimozhi dmk condemns

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X