டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக செயல்பட்டதாகக் கூறி சென்னையில் உள்ள 2000 கடைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 12 ஆயிரம் பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், தினமும் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைக்கு வருபவர்களில், ஒரு சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் இருப்பவர்கள், கட்டாயம் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், அவ்வாறு சிகிச்சை பெறும் பட்சத்தில், நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் நோயாளிகள் வரும் போது தான் சிகிச்சை பலனின்றி உயிர் பலி ஏற்படுகிறது. இதுவரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 85 பேர் உயிர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெங்கு உற்பத்தி குறித்த காரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக ஆய்வு நடத்தி வந்தனர். அதன் முடிவில், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளில் பழைய டயர்கள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அதில், டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் லார்வாக்கள் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்ய காரணமாக இருந்ததாகக் கூறி, சென்னையில் உள்ள 2000 கடைகளுக்கு அந்தந்த தொழிற்சங்கங்கள் மூலம், சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 48 மணி நேரத்திற்குள் அந்த கடைகளில் இருக்கும் பழைய டயர்கள், டியூப்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறையின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.