தமிழகம் - கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக தாங்களே தொடர்ந்து விசாரிப்போம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தண்ணீருக்காக இரு மாநிலங்கள் சண்டையிடுவதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், நதிநீருக்காக இரு மாநிலங்கள் மோதிக்கொள்வது சரியானது அல்ல எனவும் தெரிவித்தனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுக்கள் மீது ஜூலை 11-ஆம் தேதி முதல் 15 வேலை நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன் கிழமை தொடங்கியது. அப்போது, கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலி நரிமன் ஆஜராகி, ”காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மைசூர் - சென்னை மாகாணங்கள் இடையே 1924-ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தம், 1974-ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டது. ஆனால், காலாவதியான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது”, என வாதாடினார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் உத்தரவு தவறான தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது எனவும், தமிழகத்திற்கு 132 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உரித்தானது எனவும் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நடுவர் மன்றம் மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்ந்தது தேவையின் அடிப்படையில் அல்ல எனவும், மாநிலங்களின் தண்ணீர் தேவையை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் வாதங்களை முன்வைத்த பாலிநரிமன், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
விவாதத்தின்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி, “ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்ற வாதத்தை கர்நாடகம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. அதற்கான விரிவான பதிலை நீதிமன்றத்தில் அளித்துவிட்டோம்.”, என கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, “நதிநீர் பங்கீட்டுக்காக இரு மாநிலங்கள் மோதிக்கொள்வது சரியானது அல்ல. உச்சநீதிமன்றமே இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும். நடுவர் மன்றத்திற்கு மீண்டும் இந்த வழக்கு அனுப்பப்பட மாட்டாது. காவிரி நடுவர் மன்றத்தை தொடர்ந்து குறை கூறாமல், பிரச்சனைக்கு தீர்வு காண வழிமுறைகளை முன்வைக்க வேண்டும். தண்ணீருக்காக இரு மாநிலங்கள் சண்டையிடுவதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை.”, என தெரிவித்தார்.
இந்த வழக்கு வியாழக்கிழமையும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை தினந்தோறும் காவிரியிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.