/tamil-ie/media/media_files/uploads/2017/11/courtallam.jpg)
கனமழையால் குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை, தமிழக கடலோர மாவட்டங்களை உலுக்கி வருகிறது. விவசாயத்திற்கு போதுமான மழை இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அடிப்படை கட்டமைப்பு பிரச்னைகளால் வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப கட்டத்திலேயே மக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
தென்மாவட்டங்களில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் தாமிரபரணி, கோதையாறு, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி பிரபலமானது. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவி இது! தற்போதைய மழையால் இங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே அங்கு பொதுமக்கள் குளிப்பதற்கு அங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் இருந்து உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் மற்றொரு அருவி குற்றாலம்! திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு தினங்களாக மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவியிலும் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனவே அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பரவலாக போதுமான மழை இல்லை. எனவே மானாவாரி குளங்கள் இன்னும் காய்ந்தே கிடக்கின்றன. அவை நிரம்பினால் மட்டுமே மொத்த விவசாயிகளும் பயன் பெறுவதாக இருக்கும். மழை தொடர்ந்து நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.