சென்னையில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் கனமழை பெய்யும் என நார்வே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதனால் அரசு நிர்வாகம் மக்களை உஷார்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது.
சென்னையை ஒட்டிய பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்களிலும் அதிக அளவு மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் பணிக்கு சென்று வீடு திரும்பியவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். கனமழை காரணமாக தலைநகரமே ஸ்தம்பித்தது.
சென்னையில் நேற்று முன்தினம் மழைக்கு ஒரே நாளில் 7 பேர் இறந்தனர். மெரினா கடற்கரையில் தேங்கி கிடந்த மழைநீரில் தவறி விழுந்து 50 வயது மதிக்கத்தக்க முதியவர் நீரில் மூழ்கி பலியானார். சென்னை தி.நகர் கிரியப்பா சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் புகுந்த மழை நீரை காரைக்குடியை சேர்ந்த ஊழியர் பிரசாத் (வயது 28), வெளியேற்றிய போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.
சென்னை, பெரியமேடு பகுதியில் கனமழையின் போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த முகேஸ் (21) சாலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பெரியமேடு போலீசார் அங்கு சென்று முகேசின் உடலை மீட்டு அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனமழையால் சென்னை பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் இருந்த குப்பைகள் பேசின்பிரிட்ஜ் ரெயில்வே தண்டவாளத்திலும் சிக்கியது. ரெயில்வே பொதுப்பணித்துறை ஒப்பந்த ஊழியர்கள் தண்டவாளத்தில் நின்றபடி அதனை அகற்றினர். அப்போது கோட்டை பகுதியை சேர்ந்த ஊழியர் கமலேஷ் (19) கால் தவறி கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.
சென்னை, எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ரதியாள் (60) வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மண் சுவர் இடிந்து விழுந்து பலியானார். சென்னை, நங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (17) தரைதளத்தில் இருந்த பொருட்களை ‘லிப்ட்’ வழியாக மாடிக்கு எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது ‘லிப்டில்’ மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மீனம்பாக்கத்தில் கல்குவாரியில் தேங்கி கிடந்த மழைநீரில் மூழ்கி வாலிபர் ஒருவர் பலியானார். அவர் யார் என்பது குறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி பலரை கனமழை பலி வாங்கிய போதும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட பிரதான ஏரிகள் இன்னும் 50 சதவிகிதம்கூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தாலேயே பெய்கிற மழைத் தண்ணீர் முழுவதும் அடையாறு, கூவம் ஆறுகள் மூலமாக வீணாக கடலில் கலக்கிறது. முறையான கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாத காரணத்தாலேயே உயிர் பலிகளும் நடக்கின்றன. மற்றபடி, சென்னையின் தேவைக்கு இன்னும் மழை அவசியம்தான்!
சென்னையில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று (4-ம் தேதி) காலை முதல் சென்னை மாநகர் முழுக்க மிதமான தூறல் இருந்து வருகிறது. இன்று பகல் 12 மணிக்கு மேல் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்யும் எனவும், நேற்று மாலை மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியது சரியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மதியம் முதல் கனமழை பெய்யும் என நார்வே வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் வேலைகளை மாநகராட்சி முனைப்பாக செய்து வருகிறது.