தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கியது. இதனால், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் நேற்று(நவ.,1) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதாவது, நவம்பர் 5-ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் மூழ்கியுள்ளன. குறிப்பாக, சென்னையில் சாலைக்கும், பள்ளத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பது அதைவிட கொடுமையான விஷயமாக உள்ளது. இதனால், பாம்புகள், விஷ ஜந்துகள் என சென்னை மக்கள் சந்தித்து வரும் துயரத்தை விவரிக்க வார்த்தை இல்லை எனலாம்.
இந்த அவலம் எல்லாம் ஒரு நாள் மழைக்கு பெய்த கூத்து தான். கடந்த அக்.,30-ஆம் தேதி தான் சென்னையில் கனமழை பெய்தது. அந்த ஒருநாள் மழைக்கே தலைநகரம் ஆட்டம் கண்டுவிட்டது. இதில், மிகவும் சோகமான விஷயம் என்னவெனில், சென்னை கொடுங்கையூரில் நேற்று இரண்டு சிறுமிகள் சாலையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி பலியாகினர். இதுபோன்ற மோசமான அசம்பாவிதங்களை தடுப்பதே அரசின் மிக முக்கிய பணியாக இருக்கிறது. மேலும், ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கையும் உள்ளது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை ஆகிய நான்கு மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஆனால், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. வழக்கம் போல் அனைத்து கல்லூரிகளும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையை தவிர மற்ற மூன்று மாவட்டங்களிலும் தொடர்ந்து 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.