/tamil-ie/media/media_files/uploads/2017/09/Rain.jpg)
Rain, மழை
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், தெலுங்கானா முதல் தமிழகம் வரை வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என கூறியுள்ளது.
அதன்படி, சென்னையில் அனேக இடங்களில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதேபோல், இன்று அதிகாலை முதலே சென்னையின் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத மழை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர் கொட்டும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
தமிழகத்தில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது. அதேபோல், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடியவிடிய மழை பெய்து வருகிறது. மேலும், கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.